தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக - பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 1998ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். இதனால் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இவ்வாறு ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை ஆகும். சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழக்காட்டுதலால் ஜெயலலிதா இந்த வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார்” எனப் பேசியிருந்தார். அதே சமயம் கடம்பூர் ராஜுவின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர்.ரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை அவரின் மறைவிற்குப் பின் 4 முறை, அதாவது 20ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமைத்த பெருமைக்குரியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் 3வது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் ஜெயலலிதாவுக்கு உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் “இரட்டை இலை” சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து 2வது முறையாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற ஜெயலலிதாவை குறை சொல்லும் விதமாக ‘பாஜக கூட்டணி முறிவு’ என்ற வரலாற்று பிழையை ஜெயலலிதா செய்துவிட்டார் என்று ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 1999ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி ஜெயலலிதா பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான், 2001ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
ஜெயலலிதா 2வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்த வரலாறு தெரியாமல் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜுவின் பேச்சுதான் வரலாற்றுப் பிழை. ‘மோடியா, இந்த லேடியா’ பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த ஜெயலலிதாவை, கடம்பூர் ராஜூ குறை சொல்வதைப் பார்க்கும்போது ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது’ என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/31/jaya-vajpai-kadampur-raju-2025-07-31-10-16-26.jpg)
ஜெயலலிதாவை குறை சொல்வது என்பது ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்வதைப் போன்றது. ‘ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது’ மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/31/ops-pm-2025-2025-07-31-10-15-04.jpg)