மனிதநேய மக்கள் கட்சியின் கட்சி பதிவு ரத்து என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவு சட்டத்திற்கு முரணானது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019 முதல் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறி மனிதநேய மக்கள் கட்சி உட்பட 474 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த முடிவு மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் 29 ஏ பிரிவில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் இருக்கிறதே தவிரத் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29 ஏ ஐந்தாவது பிரிவில் ஏமாற்றுதல், மோசடி செய்தல் போன்ற காரணங்களுக்காகக் கட்சியின் பதிவை ரத்து செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிரத் தேர்தலில் நிற்காத காரணத்தினால் பதிவை ரத்து செய்வது என்பது முரணானது. அரசமைப்புச் சட்டத்தின் 324 வது பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் அந்தப் பிரிவு தேர்தலை நடத்துவதற்கும் தேர்தலைக் கண்காணிப்பதற்கும் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான எந்த ஒரு வழிகாட்டுதலும் அந்தப் பிரிவில் இல்லை.
உச்சநீதிமன்றம் காங்கிரஸ் எதிர் இன்ஸ்டிடூட் ஆப் சோசியல் வெல்பேர் என்ற வழக்கில் 2002 மே 10 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்: ‘ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்து தான் பிறப்பித்த உத்தரவை அக்கட்சி அரசமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது என்பதற்காகவோ தேர்தல் ஆணையத்திற்கு அளித்த உத்தரவாதத்தை மீறிவிட்டது என்பதற்காகவோ அளிக்கப்பட்ட பதிவை மீளாய்வு செய்வதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை’ (பத்தி 41.2). மனிதநேய மக்கள் கட்சி 2009 முதல் பல்வேறு சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. பல்வேறு நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்தச் சின்னத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. பேரூராட்சி மன்றத் தலைவர்களாக எம் கட்சியினர் பணியாற்றி வருகின்றார்கள். ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்குகளை முறையாகச் செலுத்தி வருகிறோம்.
எனவே மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை ரத்து செய்யும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு விரோதமாகவும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும் இருக்கிறது. எனவே இது குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்வோம். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவைப்படுமெனில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். வெளிப்படைத்தன்மை உடைய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இந்திய அளவில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் அதிலிருந்து மடைமாற்றம் செய்வதற்காகத் தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை எடுத்து இருக்கிறதோ என்கிற ஐயம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.