Advertisment

“பிரதமர் மோடியின் கருத்துகள் வரலாற்றை மறைக்கும் ஆபத்தான முயற்சி” - ஜவாஹிருல்லா விளாசல்!

mmk-jawaharuthulla

ஆர்.எஸ்.எஸ்.ஐப் புகழ்ந்த பிரதமர் மோடியின் கருத்துகள் வரலாற்றை மறைக்கும் ஆபத்தான முயற்சி என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நேற்று (15.08.20250 79ஆவது விடுதலை திருநாள் உரையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ்.யை, ‘உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம்’ என்றும், நூற்றாண்டுக் கால அதன் அர்ப்பணிப்புக்காகவும் பாராட்டிப் பேசினார். இந்தக் கருத்துகள், ஆர்.எஸ்.எஸ்.ஸின் உண்மையான வரலாற்றையும், அதன் பாசிச ஆதரவு அடிப்படை நிலைப்பாடுகளையும் முற்றிலும் மறைக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். தனது தொடக்கக் காலம்  முதலே இந்தியாவின் ஜனநாயக, மதச்சார்பின்மை, சமத்துவ அரசியல் அமைப்பை எதிர்த்து, அதனை ஒரு சங் மனநிலை கொண்ட அரசாக மாற்றும் திட்டத்தோடு இயங்கி வருகிறது.

Advertisment

விடுதலைக்கு முன்பும் பின்னும், ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை இழிவுபடுத்தி, அதை ஏற்க மறுத்தது. 1947 ஆகஸ்ட் 14 அன்று, ஆர்.எஸ்.எஸ்.எஸின்  ஆர்கனைசர் இதழ், ‘மூவர்ணக் கொடி ஒருபோதும் இந்துக்கள் மதிக்கும் ஒன்றாக இருக்காது… மூன்று நிறங்கள் கொண்ட கொடி நாட்டுக்குத் தீங்கான மனப்போக்கை உருவாக்கும்’ என வெறுப்புடன் எழுதியது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ். கோல்வால்கர், தனது சிந்தனை கொத்து (Bunch of Thoughts) நூலில், ‘நம் நாட்டிற்காகத் தலைவர்கள் புதிய கொடியை அமைத்துள்ளனர். இது வழிதவறிய நிலைப்பாடு மட்டுமே’ எனக் கூறி தேசியக் கொடியை மீண்டும் இழிவுபடுத்தினார். இக்கட்டுரை இன்றும் ஆர்.எஸ்.எஸ். வெளியீட்டில் மாற்றமின்றி உள்ளது.

விடுதலை போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்பதற்கு ‘இந்தியா 2024 ஜனவரி 23ஆம் தேதி, ராம் கோயில் திறப்பு விழாவுடன் சுதந்திரம் பெற்றது’ என்ற அதன் தற்போதைய தலைவர் மோகன் பகவத்தின் சமீபத்திய கருத்தே சான்றாக உள்ளது. ஒரு அமைப்பு இவ்வாறு நம்புகிறதெனில், 1950 ஜனவரி 26 அன்று இந்தியா ஒரு சுதந்திரக் குடியரசாக மாறியது குறித்து அதற்கு எவ்வித ஆர்வம் இருக்க முடியும்?. ஆர்.எஸ்.எஸ்.யை ‘சமூகச் சேவையின் முன்னோடி’ எனப் பிரதமர் புகழ்வது, இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களுக்கும் எதிரான அதன் செயல்பாடுகளை மறைக்கும் முயற்சியாகும். இந்தியாவின் சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம் இவை அனைத்தும் ஆர்எஸ்எஸின் அரசியல் நோக்கங்களுக்கு முரணானவை என்பது வரலாற்று உண்மை. 

மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை நேசிக்கும் அனைவரும் பிரதமர் மோடியின் உரையைக் கண்டிக்க வேண்டும். இந்தியாவின் அடிப்படை அடையாளங்களை அழிக்கும் எந்த முயற்சியையும் ஊக்குவிக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.யைப் பற்றி உண்மையைச் சொல்லாமல், அதன் வரலாற்றை அழகு படுத்துவது, தேசவிரோதச் செயல்பாடுகளுக்குப் பச்சைக் கொடி காட்டுவதாகும். ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு வரலாறு, இந்தியாவின் தியாக வரலாற்றின் ஒரு கரும் பக்கம்.  பிரதமரின் பாராட்டுகள் வரலாற்றைச் சிதைக்கும் வஞ்சகமான அரசியல் முன்னெடுப்பே” எனத் தெரிவித்துள்ளார். 

independence day. M. H. Jawahirullah manithaneya makkal katchi Narendra Modi r.s.s.
இதையும் படியுங்கள்
Subscribe