நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் படத்திற்கு சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

Advertisment

இந்த வழக்கில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

Advertisment

மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. பின்பு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து வழக்கின் விசாரணையை மீண்டும் முதலில் இருந்து விசாரித்து புதிய உத்தரவை பிறப்பிக்க தீர்ப்பு வழங்கியது. இதனால் தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்தது.  

இந்நிலையில் படக்குழு மறு ஆய்வு தணிக்கை குழுவிற்கு படத்தை அனுப்பியுள்ளனர். இதனால் ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழு தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாபஸ் கடிதம் அளித்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனு, வழக்கை வாபஸ் பெறும் பட்டியலுக்கு மாற்ற வாய்ப்பிருந்தால் விரைவில் ஜனநாயகன் விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Advertisment