அதிகாரத்திற்கு எதிராக மக்கள் படும் இன்னல்களை நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்து அவர்களின் வலியைக் கட்டுரை மூலமாகவும், தனது பேச்சின் மூலமாகவும் அருந்ததி ராய் என்ற எழுத்தாளர் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புனைவு இலக்கியத்திற்காக எழுத்தாளர்களுக்காகக் கொடுக்கப்படும் உலகின் மிக உயரிய விருதான ‘புக்கர் விருது’ கொடுக்கப்பட்டது. அவர் எழுதிய ‘காட் ஆஃப் திங்ஸ்’ என்ற முதல் புத்தகத்திலேயே புக்கர் விருது பெற்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். முதன் முதலில் இந்தியாவில் புக்கர் விருது பெற்றவர் என்ற பெருமையும் அருந்ததி ராய்க்கே கிடைத்தது.
இதனிடையே கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ என்ற படத்திற்குச் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக அருந்ததி ராய்க்குத் தேசிய விருது கொடுக்கப்பட்டது. அதனைக் கடந்த 2015 ஆம் ஆண்டு, ‘இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பதைக் குற்றமாகச் சித்தரித்து மதவெறி அமைப்புகள் வன்முறை நடத்துகின்றனர். இந்தியாவில் பட்டியலின மக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு வித பயத்தில் இருக்கின்றனர். மனிதர்கள் கொல்லப்படுகின்றனர், எரிக்கப்படுகின்றனர்” என்று கூறி தனது தேசிய விருதை திருப்பிக் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த 2010 ஆம்ஆண்டு ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை என்றும் வலுக்கட்டாயமாகக் காஷ்மீர் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் காஷ்மீர் மாநில சுதந்திரத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும்மேற்கொள்ள வேண்டும் என்றும் அருந்ததி ராய் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு குறித்த விசாரணை டெல்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இதனிடையே கடந்தாண்டு இவர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்தார். அருந்ததி ராய் தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்த நிலையில் 10 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கைத் தூசிதட்டிப் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறி அருந்ததி ராய் எழுதிய புத்தகம் உள்பட 25 புத்தகங்களை ஜம்மு காஷ்மீர் அரசு தடை செய்துள்ளது. இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஜம்மு காஷ்மீரில் சில இலக்கியங்கள் தவறான கதைகளையும் பிரிவினைவாதத்தையும் பரப்புவது அரசாங்கத்திற்கு கவனத்திற்கு வந்துள்ளது. விசாரணைகள் மற்றும் நம்பகமான உளவுத்துறையின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய சான்றுகள் மூலம், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் இளைஞர்கள் பங்கேற்பதற்குப் பின்னால் ஒரு குறிப்பிடத்தக்க உந்துசக்தியாக தவறான கதைகள் மற்றும் பிரிவினைவாத இலக்கியங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவிற்கு எதிராக இளைஞர்களை தவறாக வழிநடத்துவதிலும், பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதிலும், வன்முறையைத் தூண்டுவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இலக்கியங்கள் குறைகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பயங்கரவாத வீரம் ஆகியவற்றின் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களின் மனநிலையை ஆழமாக பாதிக்கும். ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்களை பயங்கரவாத மயமாக்குவதற்கு இந்த இலக்கியங்கள் பங்களித்த சில வழிகளில் வரலாற்று உண்மைகளைத் திரித்தல், பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துதல், பாதுகாப்புப் படைகளை இழிவுபடுத்துதல், மத தீவிரமயமாக்கல், அந்நியப்படுத்தலை ஊக்குவித்தல், வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கான பாதை போன்றவை அடங்கும்.
இந்தச் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் தவறான கதை மற்றும் பிரிவினைவாதத்தை பரப்பும் 25 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 இன் பிரிவு 98 இன் படி அவற்றை பறிமுதல் என்று அறிவிக்க வேண்டும். அடையாளம் காணப்பட்ட 25 புத்தகங்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பாரதிய நியாய சன்ஹிதா 2023 இன் பிரிவு 98 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் 25 புத்தகங்களின் வெளியீடு மற்றும் அவற்றின் நகல்களை அல்லது பிற ஆவணங்களை அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்வதாக இதன் மூலம் அறிவிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட புத்தகங்களில் அருந்ததி ராய் எழுதிய ‘அசாதி’, அரசியலமைப்பு நிபுணர் ஏ.ஜி.நூரானி எழுதிய ‘காஷ்மீர் தகராறு 1947-2012’ மற்றும் அரசியல் விஞ்ஞானி சுமந்திர போஸ் எழுதிய ‘காஷ்மீர் அட் தி கிராஸ்ரோட்ஸ் அண்ட் கான்ஸ்டண்டட் லேண்டஸ்’ ஆகிய புத்தகங்களும் அடங்கும்.