இன்பரசன்
புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் இன்பரசன் (20). இவர் கட்டுமான வேலை செய்து வந்தார். மேலும் ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வாடிவாசலுக்கு அழைத்துச் சென்று வருவதுடன் காளைகளை அடக்கவும் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு 'அன்பு பாய்ஸ்' காளையை அடக்கி அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதால் அன்பு பாய்ஸ் இளைஞர்களுக்கும் காளையை அடக்கிய இன்பரசனுக்கும் இடையே மோதல் உருவானது.
இந்த மோதலின் உச்சமாகக் கடந்த ஆண்டு (2025) அக்டோபர் 20ஆம் தேதி தெற்கு ராயப்பட்டி டாஸ்மாக் கடையில் மீண்டும் நேருக்கு நேர் மோதல் வெடித்தது. இதில் இன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் பொற்பனைக்கோட்டை மணக்கொல்லைதோப்பு சொக்கலிங்கம் மகன் விக்னேஷ் (21) மீது வெங்காய வெடியை வீசி தாக்கினர். இதில் விக்னேஷ் காயமடைந்து சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து சம்மட்டிவிடுதி போலீசார் இன்பரசன் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தான் நேற்று (12ஆம் தேதி - திங்கள் கிழமை) காலை வல்லத்திராகோட்டை காவல் சரகம் அழகம்பாள்புரத்தில் இன்பரசன் கம்பி கட்டும் வேலைக்குச் சென்றார். அப்போது இன்பரசனை ஒரு கும்பல் வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தது. கைகளை வெட்டி தனியாக துண்டித்துப் போட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. இன்பரசன் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில் தான் இன்பரசன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்பட 7 பேரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/13/siren-arrested-2026-01-13-23-51-59.jpg)
அதாவது, மணக்கொல்லைத் தோப்பு சொக்கலிங்கம் மகன் விக்னேஷ் (21), அவரது அம்மா ராசாத்தி (40), வடக்கு இம்னாம்பட்டி வீரமுத்து மகன் விக்னேஷ் (20), தெற்கு இம்னாம்பட்டி நடராஜன் மகன் ரஞ்சித் (24), சிவக்குமார் மகன் மெய்யர் (19), அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மணக்கொல்லைத்தோப்பு ரெங்கப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (22) ஆகிய 7 பேரைக் கைது செய்த போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட மோதல் ஒரு கொலையில் முடிந்து உறவினர்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்தி உள்ளதாக உறவினர்கள் வேதனைப்படுகின்றனர்.
Follow Us