புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் இன்பரசன் (20) கட்டுமான வேலை செய்து வருகிறார். மேலும் ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வாடிவாசலும் அழைத்துச் சென்று வருவது வழக்கம். இவருடன் இவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்ளுடன் ஜல்லிக்கட்டுக்கு சென்றுள்ளார். அதேபோல பொற்பனைக்கோட்டை மணக்கொல்லை தோப்பு சொக்கலிங்கம் மகன் விக்னேஷ் (21) மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஜல்லிக்கட்டு காளை வளர்த்து போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இரு தரப்பினரும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் காளை அவிழ்பதிலும், அவிழ்க்கும் காளைகளை இவர்களுக்குள் போட்டி போட்டு பிடிப்பதிலும் மோதல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கடந்த அக்டோபர் 20 ந் தேதி தெற்கு ராயப்பட்டி டாஸ்மாக் கடையில் வைத்து இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவத்தில் விக்னேஷ் மீது இன்பரசன் மற்றும் அவரது சகோதரர்கள், நண்பர்கள் தாக்கியதுடன் வெங்காய வெடியை வீசியதில் விக்னேஷ் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சம்மட்டிவிடுதி போலீசார் இன்பரசன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவர்களை பிணையில் அனுப்பியது.
தன்னை தாக்கியவர்கள் பிணையில் வெளியே சுற்றியதைப் பார்த்து கோபமடைந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இன்பரசன் மீது கோபமாக இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை இன்பரசன் கட்டிட வேலைக்கு தனது பைக்கில் வல்லத்திராகோட்டை காவல் சரகம் அழகம்பாள்புரம் சென்ற போது அங்கு தயாராக நின்ற விக்னேஷ், மற்றும் பாப்பான்கொல்லை குமார் மகன் ரோகேஷ், திருமூர்த்தி, சீனு, இம்மானம்பட்டி ரஞ்சித் மற்றும் பலர் அடங்கிய கும்பல் இன்பரசனை வழிமறித்து அரிவாளால் வெட்டி சாயத்துள்ளனர்.
பலத்த காயத்துடன் கிடந்த இன்பரசனை மீட்டு புதுக்கோட்டை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இன்பரசன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இன்பரசன் உறவினர்கள் முள்ளூரில் சாலை மறியல் செய்தனர். சம்பவம் குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட மோதலால் உறவினர்களுக்குள் உயிர் பலி எடுக்கும் நிலை வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/614-2026-01-12-15-03-26.jpg)