நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த 2 நாட்களாக ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில்,  பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பேசினர்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (30-07-25) பேசினார். அப்போது அவர், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது இந்தியா எடுத்த ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். பிரதமர் நரேந்திர மோடி கூறியதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன், இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது. பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றும் வரை, பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தம், பல வழிகளில், ஒரு தனித்துவமான ஒப்பந்தமாகும். ஒரு நாடு தனது முக்கிய ஆறுகள் மீதான உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளாமல் மற்றொரு நாட்டிற்குள் பாய அனுமதித்தது மாதிரியான ஒரு ஒப்பந்தம் உலகில் எங்கும் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை பாகிஸ்தான் நிரந்தரமாக கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது.

அப்போதைய பிரதமர், இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் பஞ்சாபின் நலன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால் இந்த ஒப்பந்தத்தைச் செய்வோம் என்று கூறினார். ஆனால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நமது சொந்த விவசாயிகளின் நலன்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பயங்கரவாதத்தை இயல்பாக்கியது.  உலக அரங்கில் பாகிஸ்தானை ஒரு பாதிக்கப்பட்டவராக தொடர்ந்து சித்தரித்தது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தவறுகளைச் சரிசெய்ய முடியாது என்று 60 ஆண்டுகளாக எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம் அவற்றைச் சரிசெய்ய முடியும் என்பதைக் காட்டியது. அரசியலமைப்பு சட்டம் 370 சரி செய்யப்பட்டது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் சரி செய்யப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பயங்கரவாதப் பிரச்சனையை உலகளாவிய பிரச்சனையாக நிறுத்தி வைப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

மே 9ஆம் தேதியன்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து எச்சரித்தார். இது போன்ற எந்தவொரு தூண்டுதலுக்கும் இந்தியா வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி உறுதியாக பதிலளித்தார். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியபோது நிலைமை எவ்வளவு தீவிரமானது? இந்த நடவடிக்கை எவ்வளவு காலம் தொடரக்கூடும்? என்பதை தெரிந்து கொள்வதற்காக பல நாடுகள் எங்களைத் தொடர்பு கொண்டன. நாங்கள் அனைவருக்கும் ஒரே செய்தியை தெரிவித்தோம். நாங்கள் எந்த மத்தியஸ்தத்திற்கும் தயாராக இல்லை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு விஷயமும் இருதரப்பு ரீதியாக மட்டுமே தீர்க்கப்படும் எனத் தெரிவித்தோம். எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், அவர்கள் அதை தெளிவாகக் கேட்க வேண்டும். ஏப்ரல் 22 முதல் ஜூன் 16 வரை அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு தொலைப்பேசி அழைப்புக் கூட இல்லை” என்று கூறினார்.