பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது. அதன்படி, இரு நாடுகளுக்கிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இதற்கிடையில் இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியது. டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மே 9ஆம் தேதியன்று நடந்த தாக்குதல் தொடர்பான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்து வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நீயுஸ் வீக் தலைமை நிர்வாக அதிகாரி தேவ் பிரகாத்துடன் உரையாடல் ஒன்றை நடத்தினார். அந்த உரையாடலின் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் வர்த்தகத்தை முன்னிறுத்தி அமெரிக்கா நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “ பாகிஸ்தான் இந்தியா மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக மே9ஆம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பிரதமர் மோடியிடம் எச்சரித்த போது அந்த அறையில் நான் இருந்தேன். என்னால் அதை சொல்ல முடியும். பாகிஸ்தானியர்கள் அச்சுறுத்தியதைப் பிரதமர் நரேந்திர மோடி பொருட்படுத்தவில்லை. மாறாக, ஒரு பதில் கொடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அன்றிரவு பாகிஸ்தான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது.
மறுநாள் காலை, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். அன்றைய தினம், பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் காஷிஃப் அப்துல்லா, இந்திய வெளியுறவுச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயாவை நேரடியாகத் தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்தைக் கோரினார். அதனால் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கும், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வர்த்தக மக்கள் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.