Jaishankar in Russia amid US tariffs
ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த ஜூலை 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி இந்தியாவுக்கு மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார்.
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரதமர் மோடி சீனா செல்ல உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் 25% வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. அதே சமயம், ரஷ்யாவுடனும் இந்தியா பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெலின்ஸ் மந்துரோவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது, “இரு நாடுகளும் தங்கள் வர்த்தகத்தை பன்முகப்படுத்த வேண்டும், கூட்டு முயற்சிகளை விரிவுப்படுத்த வேண்டும். அதிகமாகச் செய்வதும், வித்தியாசமாகச் செய்வது நமது மந்திரமாக இருக்க வேண்டும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) விதிமுறைகளை ஆணையம் இறுதி செய்துள்ளது. இது ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கை. 2021 இல் வெறும் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கிட்டத்தட்ட 59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. எனவே, நாம் அதை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா வர்த்தகம் 5 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2021இல் 13 பில்லியன் டாலர்களில் இருந்து 2024-205இல் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பெரும்பாலும் இந்திய ரஷ்ய ஹைட்ரோகார்பன் இறக்குமதி தான் காரணம் என்று கூறப்படுகிறது.