நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரைப் பெருமையுடன் பேசி வருகின்றனர். அதே சமயம், பஹல்காம் தாக்குதலால் உள்துறையில் குறைபாடு உள்ளதாகவும், பாகிஸ்தான் எதிரான தாக்குதலில் எத்தனை இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன?. என்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியது ஏன்? என்றும் எதிர்க்கட்சிகளான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையே அனல்பறந்த விவாதம் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் கோஷங்கள் மற்றும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், இன்று (30-07-25) நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசினார். அப்போது அவர், “இங்கு சீன குருக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என் முன் அமர்ந்திருக்கும் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், சீனா மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதால் அவர் சிந்தியா என்ற வார்த்தையை உருவாக்கினார். எனக்கு சீனாவைப் பற்றி தெரியாமல் இருக்கலாம், ஏனென்றால் நான் ஒலிம்பிக் மூலம் சீனாவைப் பற்றி கற்றுக்கொள்ளவில்லை. சிலர் ஒலிம்பிக்கிற்கு சென்ற போது சீனாவைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் யாரைச் சந்தித்தார்கள், என்ன கையெழுத்திட்டார்கள் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அவர்கள் சீன தூதரிடம் இருந்து தங்கள் வீடுகளில் தனியார் பயிற்சி வகுப்புகளையும் எடுத்தார்கள். சீன குருக்கள் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நெருங்கிய உறவுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். நாங்கள் அதை அறிந்து அதை சமாளித்து வருகிறோம். இருப்பினும், இந்த உறவுகள் ஒரே இரவில் வளர்ந்தன என்று சொன்னால், அவர்கள் வரலாற்று வகுப்பின் போது தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட முடிவுகளால் இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டுள்ளது” என்று கூறினார்.

நேற்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சில நாட்களுக்கு முன்பு நான் இதை அவையில் சொன்னேன். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை சவால் பாகிஸ்தானையும் சீனாவையும் பிரித்து வைத்திருப்பதுதான் என்று நான் சொன்னேன். ஆனால் நாம் தோல்வியடைந்துவிட்டோம். அவர்கள் இந்திய வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டார்கள். இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் சண்டையிடுவதாக நினைக்கிறது. ஆனால் அவர்கள் வந்ததும் அவர்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் சண்டையிட்டு வருவதை உணர்ந்துள்ளனர்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.