குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று (21-07-25) மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளவிவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை எந்தவித முன்னறிவிப்பின்றி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு ஜக்தீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார்.
மருத்துவ காரணங்களுக்காக குடியரசுத் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்தாலும், பா.ஜ.க தலைவர்கள் - ஜக்தீப் தன்கர் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், இரண்டாம் நாளான இன்று (22-07-25) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவை தொடர்ந்து, மாநிலங்களவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயணன் சிங், மாநிலங்களவையை வழிநடத்தினார். கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுமே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதில், மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலுமே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முறைப்படி ஏற்று, அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். இதனிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜகதீப் தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
பதவிக்காலம் முடியும் முன்பே மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ராஜினாமா செய்துள்ள விவகாரம், நேற்று மாலை முதல் நாடு முழுவதும் பற்றி எரிந்து வரும் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட பிறகு கருத்து தெரிவித்திருப்பது டெல்லி அரசியலில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.