வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அவர் தனது மனைவி நிர்மலாவுடன், அவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த இரு குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெகநாதன் குடும்பத்தாரின் மீது முருகனுக்குத் தீராத வன்மம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஜெகநாதனையும் அவரது குடும்பத்தினரையும் பழிவாங்கும் பொருட்டு முருகன் ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி அந்தக் குடும்பம் நிம்மதியிழந்து, அவர்கள் சிக்கலுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக இரவு நேரத்தில் ஒரு திகிலூட்டும் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். அதாவது, முட்டையில் செய்வினை செய்ததுடன், மந்திரித்த முட்டையின் மேல் சாத்தானின் படத்தை வரைந்து, அந்த முட்டைகளை இரவு நேரத்தில் ஜெகநாதனின் வீட்டு வாசலில் வைத்துள்ளார். மறுநாள் காலையில் வீட்டு வாசலில் இருந்த முட்டைகளைப் பார்த்து மஞ்சுளா அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஜெகநாதன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது, முருகன் தான் இரவில் வந்து முட்டைகளை வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஜெகநாதன் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வேதனை அடைந்த ஜெகநாதன், "அந்த முட்டைகள் அதே இடத்தில் தான் இருக்கின்றன. அந்த முட்டைகளை முருகனே தான் வந்து எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us