பெருநகர சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அமர்ந்து ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மாறாக, அதிமுகவைப் போலவே செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், போராட்டத்தைக் கைவிடுமாறு அரசு மற்றும் காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், போராட்டக்காரர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நேரில் சந்தித்து பின்னர் ஆதரவு தெரிவித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/11/a4817-2025-08-11-17-10-37.jpg)
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''தூய்மைப் பணியாளர்கள் இன்றைக்கு தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி பதினோராவது நாளாக இன்றும் ரிப்பன் பில்டிங் முன்னாடி உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களுடைய துயரில் பங்கேற்கவும், அவர்களிடம் கலந்து ஆலோசிக்கவும் நான் நேரடியாக வந்திருக்கிறேன். இதற்கு முன்னாடியே நான் வந்திருப்பேன் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் வர முடியவில்லை. அரசாங்கம் அவர்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி அனைவருக்கும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும். அதுவரை தேமுதிக அவர்களுக்கு துணையாக நிற்கும்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள்,'எல்.கே.சுதீஷ் உங்கள் புகைப்படத்துடன் ஜெயலலிதா புகைப்படத்தை இணைத்து பதிவு வெளியிட்டது' குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், ''ஜெயலலிதா இரும்புப் பெண்மணி. சாதனை செய்தவர். முதல்வராக இருந்து பல்வேறு சவால்களை சந்தித்தவர். என்னிடம் செய்தியாளர்கள் ஒரு முறை அரசியலில் உங்களுக்கு யார் ரோல் மாடல் என்று கேட்டார்கள். அப்பொழுது நான் 'நம்ம தமிழ்நாட்டிலேயே இருக்கின்ற ஒரு ஆளுமை; முதல்வராக பல சவால்களை சந்தித்த இரும்புப் பெண்மணியாக இருக்கின்ற ஜெயலலிதா தான் அரசியலில் என்னுடைய ரோல் மாடல்' என்பதை நான் பதிவு செய்ருதிக்கிறேன். அதனால் இன்று சோசியல் மீடியாவில் வைரலாகப் போய்க்கொண்டிருக்கிறது.
விஜயகாந்த், எம்ஜிஆரை தன்னுடைய மானசீக குருவாக நடிகராக இருந்த காலத்திலேயே அறிவித்தவர். ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் எம்ஜிஆர் ஸ்கூலுக்கு 50 ஆயிரம் ரூபாய், குழந்தைகளுக்கு உணவளிப்பதை வறுமை ஒழிப்பு தினமான ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடத்தி வந்திருக்கிறார். என்னுடைய மானசீக குரு என எம்ஜிஆரை விஜயகாந்த் எல்லா போட்டிகளிலும் சொல்வார். இன்றும் கூட தேமுதிக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலை மற்றும் புகைப்படம் உள்ளது. அதுபோல தான் விஜயகாந்த்தை எங்களுக்கு அரசியலில் மானசீகமான குரு என்று சொல்லட்டும். சொல்பவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். எங்குமே விஜயகாந்த்தை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் போஸ்டர் மற்றும் சோசியல் மீடியாவில் மட்டும் பயன்படுத்துவதை தான் கூடாது என்கிறோம்'' என்றார்.