IUML, MMC to be allotted 2 seats each in DMK alliance
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 22ஆம் தேதி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது.
அந்த பேச்சுவார்த்தையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி 5 தொகுதிகளை கேட்டதாகவும், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து 1 சீட்டை கூட்டணி கட்சிகள் தானம் செய்ய வேண்டும் என்று திமுக குழுவினர் கூறியதாக தகவல் வெளியானது. அதனால் இந்த பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி (ஐயூஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் யூனியன் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், “திமுக தலைமையில் பேரறிஞர் அண்ணா காலத்தில் கூட்டணி வைத்து அரசியல் நடத்தக்கூடிய ஒரே ஒரு இயக்கம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே. அந்த பாரம்பரியத்தை ஏற்ப பேரறிஞர் அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல் வருகிற நேரத்தில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியை அழைத்து முதலில் கையெழுத்து வாங்கக்கூடிய பழக்கத்தை தொடர்ந்து பேணி வருகிறார்கள். அந்த வகையில் இன்று எங்களை அழைத்து முதலில் எங்களை கையெழுத்து போட செய்திருக்கிறார்கள். 16க்கும் மேற்பட்ட இடங்களை வாங்கி வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை எங்கள் கட்சிக்காரர்களிடம் உள்ளது. அந்த வாய்ப்பு இப்போது கிடையாது,
அதனால் நாங்கள் 5 தொகுதிகளை கேட்டோம், அப்புறம் 3 தொகுதிகளுடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தோம். இன்றைய தினத்தில் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாங்கள் தொடர்ந்து பேசி முடிவுக்கு வந்துள்ளோம். சென்ற தேர்தலில் கொடுத்த 3 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால், 11 கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றிருக்கிற காரணத்தினால் எல்லா கட்சிகளிடம் இருந்தும் ஒரு தொகுதியை வாங்கி பகிர்ந்து கொடுக்க வேண்டும், அதனால் 2 தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்றுக்கொண்டிருக்கிறோம். புதுச்சேரியில் ஒரு தொகுதி ஒதுக்கித் தர திமுகவிடம் வலியுறுத்திருக்கிறோம். 2 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் தான் போட்டியிடப் போகிறோம்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் தான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல்வர் சொன்னது போல் தமிழ்நாடு வெர்சஸ் என்.டி.ஏ அடிப்படையில் தான் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டினுடைய நலன்களுக்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களுக்கு உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் செயல்படக்கூடிய என்.டி.ஏ என்ற அதிமுக - பா.ஜ.க அணி நிச்சயம் படுதோல்வி அடையும். தமிழ்நாட்டின் நலன்களை காப்பதற்காக எங்களுக்கு 2 தொகுதிகள் தான் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட இது மாபெரும் கூட்டணியாக அமைந்திருக்கிறது. இந்த தேர்தலில் மட்டும் நாங்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்று கூறினார்.
Follow Us