கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக திரித்து பேசுவது மிகவும் கஷ்டமாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது; ''செப்டம்பர் 1 ஆம் தேதி மிகப்பெரிய தீர்ப்பு டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம் என்று வந்தது. இது அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அரசு சார்பில் இது குறித்து சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவினை தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் பள்ளி கல்வி முறை சீர்குலைவதை தடுக்கவும் உச்ச நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசு சார்பாக மறுஆய்வு மனுவை நேற்று மாலை தாக்கல் செய்துள்ளோம்.

Advertisment

இது ஆசிரியர்களை பாதுகாப்பது ஒரு புறம் இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியில் எந்த தடையும் ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவும் காரணம் கூறி இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் டெட்டுக்கு தயாராவார்களா அல்லது மாணவர்களுக்கு பாட ம் கற்பிப்பதில் கவனம் செலுத்துவார்களா என்ற மனநிலை உள்ளதை நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அரசு உங்கள் பக்கம் நிற்கும். நீங்கள் உங்கள் கல்வி பணியாற்றுங்கள் உங்கள் பாதுகாப்புக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்.

ஒற்றுமை மிக முக்கியம், ஒரு சிலர் பதவி உயர்வு சார்ந்த கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். ஒரு சிலர் வாழ்வாதாரமே போகக்கூடிய நிலை, இந்த டெட் தீர்ப்பில் உள்ளது. டெட் தீர்ப்பில் முதலில் ஆசிரியர்களை காப்பாற்றுவோம். அதன் பிறகு இதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சருடன் கலந்துபேசி சரி செய்வோம். அன்புமணி ராமதாசிற்கு நேற்றே நான் பதில் கூறிவிட்டேன். உணர்ச்சியற்ற இதுபோல் சிலர் இருக்கும் காலகட்டத்தில் நாங்களும் பொதுவாழ்வில் இருக்கிறோம், மக்கள் நலன் சார்ந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்களும் இருக்கின்றோம்.

Advertisment

கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் அனைவரும் அவரவருடைய கருத்துக்களை கூறுவர். நான் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு செய்தி வந்தது. இரவு 10 மணிக்கு நான் கரூர் சென்றேன். நம் கண் முன்னாடியே பிணவறை முன்பு பள்ளி மாணவர்கள் செத்து ஸ்ட்ரக்சரில் தூக்கி வரும் பொழுது எந்த மனிதனாக இருந்தாலும், எந்த தலைவனாக இருந்தாலும், இறப்பின் பொழுது மன வேதனை இருக்கத்தான் செய்யும்.

அரசாங்கம் அன்புக்கரங்கள் திட்டத்தில் அயல் நாட்டிற்கு மாணவர்களே அழைத்துச் செல்வது வரை கல்வித் துறையில் பல திட்டங்களை கொண்டு வருகிறோம். நீங்கள் எங்களுக்குத் தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறவில்லை, அறிவு சார்ந்த கருத்துக்களை பெற்று யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவியுங்கள். படிக்க வேண்டிய வயதில் படியுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள் உங்களை நம்பி தான் வீடும், அரசும் உள்ளது. உங்களுக்கு பிடித்த தலைவர்கள் பின்னால் நீங்கள் செல்லுங்கள் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை உங்களது உயிர் மிக முக்கியம்.

கூட்ட நெரிசலில் சிக்கி கும்பமேளா மற்றும் பெங்களூர் ஐபிஎல் ஆகியவற்றில் உயிரிழப்புகள் நடந்தபோது அந்த அரசாங்கம் காவல்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தது. ஆனால் தமிழக அரசு தவெக  நிர்வாகிகளை கைது செய்துள்ளது. அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்..., முன்னாள் நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நான் எந்த கருத்து சொன்னாலும் சரி இருக்காது. அவர் உடனடியாக களத்தில் சென்று அவர் யார் மீது தவறு என்பதை கண்டுபிடித்து யார் மீது தவறு என்று கூறினாலும் அது தவறுதான்.

தமிழக வெற்றி கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர். அனைவருக்கும் மனிதாபம் என்று ஒன்று உள்ளது. உயிரிழப்புகளில் அவர்களுக்கும் மனவேதனை இருக்கும். அந்த விதத்தில் இது சார்ந்து ஆணையம் சார்பில் ஒரு நல்ல அறிக்கை வரும் பொழுது அது பற்றி பேசலாம்'' என்றார்.