பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதனால், கட்சியில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
இந்த சூழலில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (29-12-25) சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4,300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் அன்புமணி தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''அரசியல் கட்சிகளின் உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு. அந்த பொதுக்குழுவில் சில முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக அதைவிட உயர் அந்தஸ்தில் உள்ள செயற்குழுவில் அதுகுறித்து உயர்மட்ட தலைவர்கள் விவாதிப்பார்கள். தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுதான் நடைமுறை. அதிலும் செயற்குழு என்பது சில நேரங்களில் ஒரு அரங்கில் நடைபெறும். பொதுக்குழு என்பது பொது அரங்கில் நடைபெறும். ராமதாஸ் தரப்பில் பொதுக்குழு என்ற ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது. இது பொதுக்குழு அல்ல. நடந்ததை பொதுக்குழுவாக நினைத்துக் கொண்டு பேசக்கூடாது. அங்கு நடந்தது கேலிக்கூத்து.
மூன்று மணி நேரம் செயற்குழு நடக்கிறது. பொதுக்குழு 20 நிமிடம் தான் நடக்கிறது. குறிப்பாக பொதுக்குழுவில் ராமதாஸ் பேசவில்லை. அவர்கள் சொல்கின்ற கௌரவ தலைவர் பேசவில்லை. அவங்க சொல்லக்கூடிய செயல் தலைவர் பேசவில்லை. ஜி.கே மணி மட்டும் சொல்கிறார் எல்லாருக்கும் பசிக்கிறது நேரம் இல்லை அதனால் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானத்தையும் அப்படியே பொதுக்குழு நிறைவேற்றுவது என்று சொல்கிறார். தலைவர்கள் பேசாமல் ஒரு பொதுக்குழு நடப்பது என்பது பொதுக்குழுவாகவே ஏற்றுக்கொள்ளவே முடியாது.
எந்த ஒரு காலத்திலும் இவர்களால் பாட்டாளி மக்கள் கட்சியை, இவர்கள் நினைப்பது போல தலைவராகவோ அல்லது எந்த ஒரு பொறுப்பிற்கும் அவர்கள் வரவே முடியாது. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். இவர்கள் ஒவ்வொரு நிகழ்விலும் எங்களுக்கு புதிதாக எங்கள் பக்கத்தின் வாதத்தை வலுசேர்ப்பதற்கான ஆதாரங்களையும் அதற்கு தேவையான சான்றுகளையும் எங்களிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/5916-2025-12-29-16-51-33.jpg)