கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடும் தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியர்கள் உட்பட 200க்கும் அதிகமானோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாஜ ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 2 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலில் 18,500க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 64,700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் குறித்த எதிர்பார்ப்புகளும், அழுத்தங்களும் சர்வதேச அளவில் வழுத்து வரும் சூழலில், காசாவில் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு புகலிடமாக இருந்து வரும் மருத்துவமனை வளாகம், சில உயர் கட்டடங்களையும் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்கி வருகிறது.
இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதால் காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவையான உணவு, இருப்பிடம், உடை ஆகியவைகள் இல்லாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர். குழந்தைகள் உட்பட பலரும் உணவுக்காக கையேந்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் உலுக்கியுள்ளது. உணவின்றி தவித்து வருவதால், லட்சத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் இரவு பகலென்று பாராமல் தங்களது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றன. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது, காசாவில் உடனடி போர் நிறுதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
இது ஒருபுறமிருக்க காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை எதிர்த்து உலகில் உள்ள பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், காசாவில் இஸ்ரேலிய தாக்குதலையும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்காத இத்தாலிய அரசாங்கத்தின் முடிவையும் எதிர்த்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல இத்தாலிய நகரங்களில் பேரணி நடத்தினர். காசாவில் பாலஸ்தீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதற்கு எதிராக ‘எல்லாவற்றையும் தடுப்போம்’ என்ற பெயரில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி மிலன் பகுதியில் உள்ள மத்திய நிலையத்தில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அந்த சமயத்தில் பாலஸ்தீனக் கொடியை அசைத்து ஒரு கம்பத்தை பயன்படுத்தி நிலையத்தில் ஜன்னலை போராட்டக்காரர்கள் உடைத்தனர். மேலும் போலீசார் மீது நாற்காலிகளை வீசி தங்களது எதிர்ப்பை காண்பித்தனர். இதனால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் 60க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மிலன் நகரம் மட்டுமல்லாது இத்தாலி நாட்டிலுள்ள பல நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை போலீசார் தடுக்க முயன்ற போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி, வெனிஸ் துறைமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். இதில், போராட்டக்காரர்கள் பல பேர் காயமடைந்தனர். போலோக்னாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையைத் தடுத்து வாகனங்களை நிறுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது போலீசார், போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனர். இது போல், பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால் இத்தாலி நாடு முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றதால் இத்தாலி பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாலி பிரதமரான ஜியோர்ஜியா மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘மூர்க்கத்தனமான போராட்டங்களை நடத்துவது, ரயில் நிலையத்தில் நாச வேலை செய்வது, எந்த தொடர்பும் இல்லாத வன்முறை ஆகியவற்றால் காசாவில் உள்ள மக்களின் வாழ்க்கையில் எதையும் மாற்றாது. ஆனால் இத்தாலிய மக்களுக்கு உறுதியான விளைவுகளை ஏற்படுத்தும். அவர்கள் துன்பப்பட்டு போராட்டக்காரர்களால் ஏற்படும் சேதங்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தவர்களிடமிருந்தும் அனைத்து அரசியல் சக்திகளிடமிருந்தும் தெளிவான கண்டன வார்த்தைகள் வரும் என்று நான் நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.