தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. அதே சமயம், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். 'தேர்தல் நெருங்கிட்டு இருக்கு. உங்களுடைய நோக்கம் திமுகவை வீழ்த்துவதா? எடப்பாடியை வீழ்த்துவதா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
''என்னுடைய எண்ணம் என்ன என்பது எங்கள் தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாவே தெரியும். அதனால் திரும்ப திரும்ப பேச வேண்டியது இல்லை. கூட்டணிக்கு பிப்ரவரி 24 வரைக்கும் எங்களுக்கு டைம் இருக்கு. கூட்டணியின் தலைமை ஏற்கும் சில கட்சிகள் எங்களை அணுகி எங்களோடு பேசி வருகிறார்கள். ஒரு முடிவுக்கு வந்த பிறகு அதை சொல்வது தான் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தவிர்த்துவிட்டு எந்த ஒரு கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலைதான் இன்றைக்கு தமிழக அரசியல் நிலவி வருகிறது. நான் ஏதோ இதை அதீத நம்பிக்கையில் சொல்லவில்லை. இன்றைக்கு அரசியல் சூழ்நிலை அப்படி இருக்கிறது. நான்கு முனை போட்டி என வருகின்ற பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு உறுதியாக இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
பாஜகவுடன் எடப்பாடி இருக்கும் வரை பாஜக கிட்ட போக மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்கள். நயினார் நாகேந்திரன் நீங்க வந்து விடுவீர்கள் என்று சொல்கிறார்' என்ற கேள்விக்கு, ''அவர் அவருடைய விருப்பத்தை சொல்கிறார். நான் எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தை தான் செயல்படுத்த முடியும்'' என்றார்.
அதிமுக-பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில் நேற்று அமித்ஷாவை டெல்லியில் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக போட்டியிட விரும்பும் 65 தொகுதிகள் கொண்ட பட்டியலை சமர்ப்பித்துள்ளார். இதனால் பாஜக அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எனும் நிலையை எட்டியுள்ளது. எனவே அதிமுக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைவது கேள்விக்குறியே. திமுக கூட்டணி பக்கம் போகும் முடிவை டி.டி.வி எடுக்க முடியாது என்பதால் தவெக பக்கம் அமமுக கரையொதுங்க வாய்ப்புள்ளது என்ற கணிப்புகள் எழுந்துள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பின்னர் தவெகவில் இணைந்த நிலையில் ஜனவரியில் கட்சிக்கு பெரிய பரிசு கொடுக்க இருப்பதாக அண்மையில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியானது. இதனால் டி.டி.வியிடம் செங்கோட்டையனுக்கு இருக்கும் இணக்கத்தால் அமமுக தவெக கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/a5833-2025-12-15-12-33-53.jpg)