பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளை பொறுத்த வரையில், “பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
ஐதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு இடையே அதிவிரைவு ரயில் தடம் உருவாக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் அரிய வகை கனிமங்களுக்கான வழித்தடத் திட்டம் உருவாக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை இன்று (1.2.2026 - ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள மத்திய நிதி அமைச்சர்சீதாராமனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2025-2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, உலக அளவில் போர் போன்ற பதற்றத்தால் உள்ள உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 2025-2026-க்கு 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் 2026-2027-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இது வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.
இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புக்கள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு. மின்னணுசார் உற்பத்தி, மருந்துகள், ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் போன்ற பல முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளது பாராட்டுகிறேன். இதற்கான நிதி ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி மேம்பாட்டு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதம், கால்நடை துறை முதலியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.
சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக. நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூபாய் 2000 கோடி, மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை மிக உதவியாக இருக்கும். சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ்நாடு இதனால் பயன்பெறும். இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், நிதி அமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/01/623-2026-02-01-19-31-34.jpg)