பா.ம.க.வில் அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
இத்தகைய சூழலில் “எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து எடுத்துள்ளோம். வீட்டில் நான் அமரும் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்ட விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவியை என் நாற்காலிக்கு அருகில் வைத்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த துப்பறியும் குழுவினர் 5 பேர் ராமதாஸ் வீட்டில் முழுமையாகச் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் வேறு ஏதேனும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா? என்ற கோணத்திலும் சோதனையில் ஈடுபட்டு துப்பறியும் குழுவினர் அதன் அறிக்கையை ராமதாஸிடம் வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து பா.ம.க.வின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், “ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார்?. எதற்காக இந்த ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்தார்கள்?. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?. என்பதைக் கண்டறிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரை அடுத்து இன்று ராமதாஸ் உடைய தைலாபுரம் தோட்டத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வியாழன் கிழமையான இன்று வழக்கம்போல் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''யார் சொல்லி அந்த ஒட்டு கேட்கும் கருவி இங்கு வைக்கப்பட்டது. யார் கொண்டு வந்தார்கள் என்பதெல்லாம் விசாரணையில் இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அது அம்பலத்திற்கு வரும்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் ஒருவர் 'உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உள்ளதா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராமதாஸ், ''இருக்கிறது. உங்கள் மேல் தான் சந்தேகம் இருக்கிறது'' என கேள்வி எழுப்பிய செய்தியாளரரை சுட்டிக்காட்டி 'ஏன் அது நீங்களாக இருக்கக் கூடாது' என சொல்லியபடி சிரித்தார். ''போலீசார் விசாரணை தொடங்கி விட்டனர். இன்று காலை எட்டுக்கும் மேற்பட்ட போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் சைபருக்கு கீழே மைனஸில் போய்க்கொண்டிருக்கிறது. சைபர் கிரைம் என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா?'' என்று பேசினார்.