தமிழகத்தை மீட்ப்போம் எனும் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று ஊட்டி குன்னூர் மக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வருண பகவான் இங்கு நமக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? இதே அதிமுக ஆட்சியில் எல்லா மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா நீலகிரி மாவட்ட மக்களை நேசித்தவர். அடிக்கடி நீலகிரிக்கு வருகை தந்து மக்களை சந்தித்தார்கள். அம்மா போலவே இன்றைய அதிமுகவினரும் உங்களை நேசிக்கிறோம்.
நீலகிரி மாவட்ட மக்கள் நோய் வசப்பட்டால் மேட்டுப்பாளையம், கோவைக்குப் போக வேண்டிய நிலை இருந்தது. அதனால் சிறப்பான மருத்துவ சிகிச்சைக்கு 400 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தேன். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கான மருத்துவமனையை கொடுத்தோம். நாங்கள் கொண்டுவந்தோம், திமுக ஆட்சிக்கு வந்ததும், நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைத்துவிட்டார். திமுக ஆட்சியில் இதுபோல ஏதாவது ஒரு பெரிய திட்டம் கொடுத்தார்களா?
விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வால் அடித்தட்டு மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் கடும் சோதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், திமுக அரசு இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. அதனால்தான் பொம்மை முதலமைச்சர். நிர்வாகத் திறமையற்றவர் என்கிறோம். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும் போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். மக்கள் சிந்தனை மட்டுமே அதிமுகவுக்கு இருந்தது. இன்றைய அரசு அப்படியா இருக்கிறது? வேலைவாய்ப்பு குறைந்து, செலவு அதிகரித்துவிட்டது.
நீலகிரியில் ஆன்லைன் பாஸ் முறை வந்துள்ளது. திமுக நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தினால் இப்படிப்பட்ட நிலை வந்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாகனம் தான் நீலகிரி செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீசனில்தான் அவர்களுக்குப் பிழைப்பு நடக்கும். விடியா திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் இன்றைக்கு 6 ஆயிரம் வாகனத்துக்கு மேல் வர முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தில் மக்களின் பிரச்சனையை எடுத்துச்சொல்லி இதற்கு ஒரு தீர்வு காணப்படும். குன்னூர், கூடலூர், உதகை வியாபாரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்க அதிமுக அரசு துணை நிற்கும்.
கேரளா, தமிழ்நாடு எல்லையில் கீழ்வாதியா ஜாதிச்சான்றிதழ் கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் நான்காண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இன்றைக்கு மத்திய அரசுக்கு இந்த அரசு பரிந்துரை செய்யவில்லை என்பதால் அவர்களுக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. கீழிருந்து மலைப் பகுதி வரை வந்துவிட்டது. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். போதைப்பொருட்களை அதிகார மையத்தின் உதவியோடு திமுகவினரே செய்கிறார்கள் என்பது செய்தி. மலைப்பகுதி மக்கள் வீடு கட்ட சிரமப்படுகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கூடலூர் 3 தொகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்ட வேண்டும் என்று விண்ணப்பித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான அனைவருக்கும் அனுமதி கிடைக்கும். அதிமுக ஆட்சியில் வீடு கட்ட வெறும் 1000 சதுர அடிக்கு 37 ஆயிரம் ரூபாய், அனுமதிக் கட்டணமாக இருந்தது. திமுக ஆட்சியில் நகராட்சிப் பகுதியாக இருந்தால் 74 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். பேரூராட்சியில் அதிமுக ஆட்சியில் 24 ஆயிரம் ரூபாய், அதுவே திமுக ஆட்சியில் 70 ஆயிரம் ரூபாய். பணம் கட்டினாலும் அனுமதி கிடைப்பதில்லை. மீண்டும் அதிமுக ஆட்சியில் இந்த கட்டண உயர்வு குறித்து ஆலோசித்து சரியான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். அதுமட்டுமல்ல குன்னூர் நகராட்சியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கடும் சோதனைக்கு உள்ளாகியிருப்பதாக மனு கொடுத்துள்ளனர்.கடையை காலி பண்ண வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான இடம் தேர்வுசெய்து அதன்பிறகு மாற்று இடம் கொடுக்க வேண்டும், அதுவும் வியாபாரிகள் எந்த இடத்தை தேர்வு செய்கிறார்களோ, அங்கு கொடுக்க வேண்டும். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சௌகரியமான இடத்தை ஒதுக்கித் தர வேண்டும்.
கொரோனா காலத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். நோயைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையிலேயே நல்ல முறையில் சிகிச்சை கொடுத்தோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம்.
திமுக ஆட்சியில் அதிமுகவின் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், .50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 82 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். நீலகிரி மலை கிராமம், ஏழை மக்கள் நிறைந்த பகுதி. ஏழை, விவசாய தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/23/a5331-2025-09-23-14-49-23.jpg)
கனிமொழி பேசுகிறார். அதிமுக கட்சி அலுவலகம் டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருக்கிறது என்று பேசுகிறார். அந்தம்மா கனவு கண்டதா என்று தெரியவில்லை. திருமதி கனிமொழி அவர்களே, அதிமுக அலுவலகம் சென்னையில் தான் இருக்கிறது. வந்து பாருங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்துப் பார்த்தீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஏனென்றால் அதிமுகவை எம்ஜிஆர், அம்மா என்ற இரு தெய்வங்களும் அருள் புரிந்து காத்தருள்கிறார்கள். அதிமுகவை உடைக்க, பிளக்க சதி செய்தீர்கள், எந்த விதத்திலும் அதிமுக செயல்படக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் மூலமாக வெவ்வேறு விதத்தில் முயற்சி செய்தீர்கள், அத்தனையும் அதிமுக தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது. இது தொண்டர்கள் நிறைந்த கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி, ஸ்டாலின் அவர்களே நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை அசைக்கவோ ஆட்டவோ முடியாது. அதிமுகவை அழிக்க எத்தனையோ பேரை கொம்பு சீவிக்கொண்டிருக்கிறீர்கள், எத்தனையோ வழியில் சோதனையை ஏற்படுத்துகிறீர்கள். அத்தனை சோதனையும் தூள் தூளாக்கப்படுகிறது.
இதேபோல திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்த கட்சித் தலைவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிடாதீர்கள். திமுக இரண்டாகப் போனது கருணாநிதி தடுமாறிக் கொண்டிருந்தார், அப்போது சிலர் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தபோது காப்பாற்றிக்கொடுத்தது அதிமுக. எப்போதும் அதிமுகவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். ஆனால் திமுக மக்களுக்கும் உதவிசெய்தது கிடையாது, கூட்டணி கட்சிக்கும் உதவி செய்த வரலாறு கிடையாது.
குன்னூர் நகராட்சி திமுக துணைத் தலைவர், முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் இந்த நகராட்சியில் டெண்டர் எடுப்பதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக மனு கொடுத்துள்ளனர், அது யார் என்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல சட்டவிரோத கட்டடத்துக்கு அனுமதி கொடுக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் எங்கெல்லாம் சட்டவிரோத கட்டட அனுமதி கொடுத்தார்களோ, அதன் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குன்னூர் தொகுதியில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டம் 95 கோடியில் கொடுத்தோம், கோத்தகிரியில் 10.5 கோடி ரூபாயில் அலக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் அமைத்துக்கொடுத்தோம், படுகர் சமுதாய மக்கள் கொண்டாடும் ஸ்ரீ ஹெத்தய் அம்மன் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் அரசு விடுமுறை விட்டோம். படுகர் சமுதாய மக்கள் பலகாலமாக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர், அதிமுக ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் பரிந்துரை செய்து விரைவுபடுத்தப்படும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் வாகனங்களால் குன்னூரில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க காட்டேரி பகுதியில் இருந்து உதகைக்கு கேத்தி வழியில் மூன்றாவது பாதை சுமார் 121 கோடி ரூபாய் மதிப்பில் அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசில் இந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைவுபடுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு சாலை கொண்டுவரப்படும்.
திமுகவினர் குன்னூர் நகராட்சியில் கடைகளுக்கு வாடகை உயர்த்தமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் உயர்த்திவிட்டனர். இதை எதிர்த்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தினோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் வியாபாரிகளை அழைத்து தீர்வு காணப்படும். இப்போது தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைகிறார்கள். அதிமுக ஆட்சியில் பச்சை தேயிலைக்கு ஒருகிலோவுக்கு 2 ரூபாய் கொடுத்தோம், அதை உயர்த்த வேண்டும் என்று கேட்டுள்ளனர், அதிமுக ஆட்சி அமைந்ததும் மானியம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் டான் டீ தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
அவர்கள் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும்.கூட்டுக்குடிநீர் திட்டம் சரியாக பராமரிக்கவில்லை என்று சொல்கிறார்கள், மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் முறையாக பராமரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும். குன்னூர் வாகன நெரிசல் போக்க மல்டி லெவல் பார்க்கிங் கேட்டுள்ளீர்கள், அதுவும் அதிமுக ஆட்சியில் அமைத்துக் கொடுப்போம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.