சென்னை பூந்தமல்லியில் நேற்று (11/07/2025) சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையில், ''31 ஆண்டுகளாக உயிரைப் பணயம் வைத்து இந்த கட்சியைக் காப்பாற்றி வந்துள்ளேன். நம்மை குறிவைத்து தாக்குகிறார்கள். இந்த இயக்கத்திற்கு சோதனை வரும் போதெல்லாம் அதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்த பொழுது சில வேளைகளில் தவறான முடிவுகளும் நான் எடுத்தேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/11/a4372-2025-07-11-12-17-18.jpg)
நான் அதிமுகவுடன் உறவு வைக்க வேண்டும் என நினைத்தவன் அல்ல. ஆனால் கட்சியில் ஒரு எட்டு பேராவது சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா அம்மையாரை சந்தித்தேன். நான் திருச்சி திமுக மாநாட்டிற்கு போகாமல் அதிமுகவின் ஜெயலலிதா உள்ள போயஸ் தோட்டத்திற்கு சென்று உடன்பாடு வைத்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. திமுக கூட்டணியில் தான் நாம் எந்த சூழ்நிலையிலும் நீடிப்போம். அதன் வெற்றிக்கு பாடுபடுவோம். கைத் தட்டுங்கள். இது என் கட்டளை'' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் வைகோவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், ''வைகோ மீது மரியாதை இருக்கிறது. அவருடைய உரை எனக்கு பிடிக்கும். அவர் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்று சொல்வார்கள். நன்றி மறக்க கூடாது. அவர் திமுகவை விட்டு பிரிந்தபோது முதன்முதலாக 1998 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் சேர்க்கப்பட்டு ஐந்து சீட்டுகள் ஒதுக்கப்பட்டு 3 எம்பிகள் கிடைத்தது. அதற்கு முன்பு மதிமுகவில் எம்பி இருந்தார்களா? கிடையாது. எம்பி ஆனது மட்டுமல்லாமல் அந்த கட்சிக்கும், பம்பரம் சின்னத்திற்கும் அங்கீகாரம் கிடைத்ததற்கான காரணம் ஜெயலலிதா கூட்டணியில் மதிமுக இருந்து தான்.
அதையெல்லாம் மறந்துவிட்டு கொஞ்சம்கூட வாய் கூசாமல் இதுபோன்று மறைந்த தலைவரை, கட்சியை இழிவு படுத்தி பேசுவது என்பது நல்லதல்ல. திமுகவை பற்றி புகழ்ந்து கொள்ளுங்கள். எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. திமுகவை பற்றி என்னென்ன சொன்னீர்கள் நீங்கள். திமுகவை பற்றி சொல்லாத வார்த்தையே கிடையாது. திமுகவிலிருந்து மதிமுக பிரிந்தபோது மதிமுக தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அன்று வைகோ ஒரு வார்த்தை சொன்னார். 'எங்கள் தொண்டர்கள் மீது கை வைத்தால் உங்கள் வீட்டில் பெண்கள் எல்லாம் வெள்ளை சேலை கட்டிக் கொள்ள வேண்டிய நிலைமை வரும்' என்று சொன்னாரா இல்லையா? அப்படியெல்லாம் சொல்லிவிட்டு இன்று திமுகவிடம் ஏதோ எதிர்பார்ப்பிற்காக கூட்டணி வைத்து, எதிர்பார்த்ததை நிறைவேற்றி அதில் கூட நீங்கள் லாபம் அடையுங்கள். அதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அதற்காக அங்கீகாரம் கொடுத்த எங்களை எல்லாம் வசைபாடாதீர்கள். நன்றி மறவாதீர்கள்'' என்றார்.