'It remains an incomprehensible mystery' - Durai Vaiko interview Photograph: (ADMK)
இன்று (05/09/2025) செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை நாம் அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று வெளியே சென்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் சென்று, இதுகுறித்து முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமானவரிடம் வலியுறுத்தினோம். ஆனால், பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கவில்லை.
வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வருவதற்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ‘எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள். யார் யாரை இணைக்கலாம் என்பதை கட்சியின் பொதுச்செயலாளரே முடிவு செய்யலாம். கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும்.
விரைவாக முடிவெடுத்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புகின்றனர். நான் விடுக்கும் கோரிக்கையை ஏற்றால், பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்றிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” எனத் தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையனின் கருத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவிடம் செய்தியாளர்கள் செங்கோட்டையனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''அதிமுகவுடைய முன்னணி நிர்வாகி செங்கோட்டையன் கருத்து என்பது அந்த இயக்கத்தைச் சார்ந்த கருத்து. அதை அந்த இயக்கத்தை சார்ந்த நிர்வாகிகளிடம் கேட்க வேண்டும். இது அவர்களுடைய இயக்கத்தைச் சார்ந்த விஷயம். மாற்று இயக்கத்தைச் சேர்ந்த நாம் அது குறித்து கருத்து சொல்ல முடியாது. சொல்வதும் ஆரோக்கியமானது கிடையாது'' என்றார்.
டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, ''பாஜக கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருக்கிறார். எந்த நோக்கத்திற்காக அந்த கூட்டணியில் சேர்ந்தார்கள். இப்போது எந்த நோக்கத்திற்காக அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. எங்களுடைய கூட்டணியைப் பற்றி நாங்கள் சொல்ல முடியும். எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேரூன்றி விடக்கூடாது என்ற ஒற்றை இலக்கில் தான் பயணிக்கிறோம்.
எங்களுக்குள்ளும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கம், மதிமுக உள்ளிட்ட அனைவரும் மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் வேரூன்றக் கூடாது என்ற ஒற்றைக் கருத்தில் இருக்கிறோம். அதனால் தான் ஏழு வருடம் கழித்து எட்டாவது வருடமான இன்றும் கூட்டணி நீடிக்கிறது. எந்த வித விரிசல்களும் கிடையாது. இந்த கூட்டணி மேலும் விரிவடைய தான் வாய்ப்பு இருக்கிறது. பாஜக தலைமையிலான கூட்டணியைப் பொறுத்தவரை டி.டி.வி.தினகரன் விலகி இருக்கிறார். ஓபிஎஸ் விலகி இருக்கிறார். டிசம்பர் மாதத்தில் தான் இதைப்பற்றி அறிவிப்போம் என மற்ற சிலர் சொல்லி இருக்கிறார்கள். ஒற்றுமை இல்லாத, ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத ஒரு கூட்டணியாக தான் பாஜக கூட்டணி இருக்கிறது'' என்றார்.