பா.ம.க.வில் அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
நேற்று (11/07/2025)கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார். 'நேற்று முன் தினம் எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்தது கண்டறிந்து எடுத்துள்ளோம். வீட்டில் நான் அமரும் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்ட விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவியை என் நாற்காலிக்கு அருகில் வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அன்புமணி தரப்பு ஆதரவாளரான பாமக வழக்கறிஞர் பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ். அவருடைய வீட்டில் ஓட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருக்கிறது என்பது பாதுகாப்பு குறைபாட்டை காட்டுகிறது. அப்படி நடந்து இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் ராமதாஸை நேசிக்கும் மக்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது போக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்றால், இதன் பின்னணியில் இருப்பது யார்? எந்த நோக்கத்திற்காக அந்த கருவி பொருத்தப்பட்டது என்ற உண்மைகளை தமிழ்நாட்டு மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் உள்ளடங்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.