'It is our duty to thwart the conspiracies of the Sanatana forces' - vck announces protest Photograph: (vck)
அண்மையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது குறித்த தனிநீதிபதியின் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்த, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமையில் இருந்து இன்று வரை இந்த வழக்கில் காரசார விவாதங்களுடன் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகள் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன.
இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் 1996 இல் தள்ளுபடி செய்துவிட்டது. “எங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இந்து சமய அறநிலையத்துறை தான் முடிவு செய்யும்” என்று தீர்ப்பளித்து விட்டது. அதன்பின்னர் 2014இல் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும் வழக்கமாக ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்ற வேண்டும் என 2017 இல் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு சனாதனவாதிகளின் வழக்கை இரண்டு முறை நீதிமன்றம் நிராகரித்த பிறகும் கூட, அதே கோரிக்கையை மீண்டும் தங்களுக்கு வேண்டிய நீதிபதி ஒருவரை முன் வைத்து மதவெறிக் கும்பல் பிரச்சனை கிளப்பியுள்ளனர்.
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டத் தீர்ப்புகள்; இதுவரை அரசாங்கம் பின்பற்றி வந்த நடைமுறைகள்; நூறாண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படும் வழக்கம் - இவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு எந்தவித சட்ட ஆதாரமும் இல்லாமல் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றலாமென தனி நீதிபதி பிறப்பித்த ஆணை, இப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பிரச்சினையாக உருமாறியுள்ளது. அந்த நீதிபதியின் சட்டவிரோதமான செயல்பாடுகளைக் குறிப்பிட்டு இப்போது நாடாளுமன்றத்தில் 'இம்பீச்மெண்ட் 'நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் திரு. ராகுல் காந்தி, திரு.அகிலேஷ் யாதவ் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் முடக்குவதற்கு ஆளுநர்களை அது பயன்படுத்தியது. அதற்குக் கடைசியாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அளித்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது. ஆளுநரை இனி பயன்படுத்த முடியாது என்பதால் இப்போது நீதித்துறையை மோடி அரசாங்கம் தனது கருவியாக்க முயற்சிக்கிறது. நீதிபதி நியமனங்களில் தலையிட்டு ஆர் எஸ் எஸ், பாஜக ஆதரவு நபர்களை நீதிபதிகளாக நியமிப்பது; அவர்களைக் கொண்டு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கச் செய்வது என இந்த நாட்டை மிகவும் அபாயகரமான நிலையை நோக்கி மோடி அரசு நகர்த்திக் கொண்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்க முயற்சிக்கும் மதவெறி சனாதன சக்திகளை முறியடித்துத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள நீதிபதிகள் நியமனத்துக்கான 'கொலிஜியம்' முறையை மாற்றிவிட்டு, அரசியல் தலையீடு இல்லாத புதிய முறை ஒன்றை உருவாக்கும்படி இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டியதும் அவசியமாகியுள்ளது.
இந்த இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் அனைத்து சனநாயக சக்திகளும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்!' என தெரிவித்துள்ளார்.
Follow Us