கலைப் பண்பாட்டுத்துறை, திருநெல்வேலி மண்டலத்தின் சார்பில், “நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” நிகழ்ச்சி நெல்லை வ.உ.சி. மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த தொடக்க நிகழ்வில், நேற்று (23/08/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முரசு கொட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், வில்லிசை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவின் தொடக்க நிகழ்வில் பேசிய கனிமொழி கருனாநிதி எம்.பி. , "பாரம்பரிய நடனம் என்பது தனக்குள்ளே தன்னைத் தேடும் ஒரு கலை. இந்தக் கலை மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால், மண் சார்ந்த கலை மக்களின் ஏக்கம், அவர்களின் வழி, அச்சம், வாழ்வியல், புரட்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். அந்தக் கலை மருவி வந்த நிலையில், அதனை மீட்டெடுத்து மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ‘சென்னை சங்கமம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/24/a4970-2025-08-24-15-03-58.jpg)
அந்த உற்சாகம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்தது. நாட்டுப்புற கலைஞர்கள் தற்போதைய காலத்தில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் பயிற்சியாளர்களாகவும் செல்கின்றனர். இது மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக உள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள் தற்போது திரைப்படங்களிலும் வலம் வரத் தொடங்கி விட்டனர். அதுவும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுகிறது.
நாட்டுப்புற கலை வடிவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது. இதனை புரிந்து கொண்டால் தான் தமிழர்களின் வாழ்வியல் பெருமையை புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.
நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மண் சார்ந்த கலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஏழு இடங்களில் ‘சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், நெல்லை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாழ்வியலும் கலையையும் எடுத்துக்கூறும் எழுத்தாளர்கள் வாழ்ந்த மண் என்ற பெருமையை பெற்ற நெல்லையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது மிகுந்த பெருமைக்குரியது. நாட்டுப்புறக் கலை வடிவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது. இதனைப் புரிந்து கொண்டால்தான் தமிழர்களின் வாழ்வியல் பெருமையை புரிந்து கொள்ள முடியும் " என்றார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம் மைதீன்கான், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, நெல்லை மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், தேவாலய உபதேசியார் பணியாளர் நலவாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.