கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதேசமயம் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (13.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நீதிபதிகள், “ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும். விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அஜய் ரஸ்தோகி முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை கரூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரத்குமாரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும் போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!' என தெரிவித்துள்ளார்.