'அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்'-பாமகவின் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ளது. அதை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அரசு பணி அலுவலர்கள் தங்களது பணி ஓய்வுக்கு பின், பிறரது தயவினை எதிர்பார்க்காமல் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு சட்டங்கள் மூலம் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகள் சேவைப் பணியான அரசு பணி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஓய்வூதிய நிதியினை பராமரிக்க ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தை உருவாக்கி அதன் வாயிலாக நிதி மேலாண்மை செய்யும் நிலையில், தமிழக அரசு இந்த ஆணையத்தில் சேராததால் 31.3.2025 வரை ஓய்வு பெற்ற சுமார் 45,625 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பணிக்கொடை கூட அரசு ஊழியர்களுக்கு வழங்கபடவில்லை. அரசின் பங்களிப்பு தொகை மட்டும் வட்டியுடன் மொத்தமாக அளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை உள்ளது. அரசு ஊழியர்கள் பணியின் போது இறக்கும் தருவாயிலும், உடல் நல குறைபாடு ஏற்பட்டு பணியிலிருந்து விலகும் தருவாயில் அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு எவ்வித சட்டபூர்வமான நிதி உதவியும் வழங்கப்படுவதில்லை.
தமிழ் அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் பெயரளவில் மட்டுமே ஓய்வூதிய திட்டமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தாராள மனப்பான்மையுடனோ, கருணைத் தொகையோ அல்ல, மாறாக அரசினால் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டிய அவர்கள் பணிக்கான அடிப்படை உரிமையாகும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை செலவினங்களாக கருதாமல் அரசின் திட்ட செலவினங்களில் ஒரு அங்கமாக கருத வேண்டும். போதுமான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அறிவார்ந்த நபர்களை அரசுப் பணிக்கு ஈர்ப்பதோடு, அரசு துறையின் மாண்பும் காக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைகின்றன. இந்தியாவிலும் சட்டீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் அடைந்துள்ளன. ஆதலால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கினால் நிதி இழப்பு ஏற்படும் என்பதும், திட்டங்களை செயல்படுத்த இயலாமல் போய்விடும் என்பதும் ஏற்புடையதல்ல.
அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதிலும், இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்கள், பெருநோய் தொற்றுகள் போன்ற அத்தியாவசிய சமயங்களிலும் தொய்வின்றி பணியாற்றும் அரசு அலுவலர்கள், எதிர்கால தலைமுறையை வளமானதாக மாற்றும் ஆசிரியர்களுக்கும் மக்களுக்காக பணியாற்றுபவர்களின் நியாயமான கோரிக்கையை இனியும் கிடப்பில் போடுவது ஏற்புடையது அல்ல. கடந்த 22 ஆண்டுகளாக போராடிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/21/a4284-2025-09-21-10-11-56.jpg)