கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என பலர் மயக்கமடைந்திருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள 04324 259306, 7010806322 (வாட்ஸ்அப்) உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறந்தவர்கள் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பேசியதாவது, துயரத்தில் நாம் உறைந்து கிடக்கின்ற போது இவர்தான் காரணம் அவர்தான் காரணம் என குற்றம் சுமத்துவது ஏற்புடையது இல்லை. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிருக்கு போராடும் நபர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன்.
உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் அரசு அறிவித்துள்ளது. அதேபோல் காயமடைந்தவர்களுக்கு தல ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு 50 லட்சமாகவும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு 5 லட்சமாக வழங்கவேண்டும் என்ன விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தப் பெரும் துயரத்திற்கு யார் பொறுப்பு என்பதை விட உயிருக்கு போராடும் நபர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக அந்த பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோருக்கும் கூட்டம் கூடுகிறது. ஆனால் இந்தக் கூட்டத்தில் அறுதிப் பெரும்பான்மையாக இளைஞர்கள் இருக்கிறார்கள். பாதுகாப்பு பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இளைஞர்கள் அந்த கூட்டத்தில் இருந்தார்கள். ஆர்வம் மிகுதியில் விஜய் இருக்கும் இடத்திற்கு முண்டியடித்து கூட்டத்தில் நகர்கின்றனர், இதனால் ஏற்படுகின்ற நெரிசல் இந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைக்க கூடிய தலைவர்கள் அவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப நேரம் இடம் உரையின் கால அளவு ஆகியவற்றை தீர்மானிக்க வேண்டும், ஒரு இடத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் தாமதமாகும் நேரத்தில் மேலும் மேலும் அந்த இடத்தில் மக்கள் அதிகம் கூடுகின்றனர். இதனால் கடுமையான நெரிசல் ஏற்படும் இடமாக அமைந்து விடுகிறது, உரிய நேரத்தில் நிகழ்வுகளை துவக்கினால் அடுத்தடுத்த வரக்கூடிய மக்களை கட்டுப்படுத்த வாய்ப்பு உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்று லட்சக்கணக்கான தொண்டர்களை கூட்டி பேரணி, கூட்டங்கள் நடத்தியுள்ளோம். எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்பது நமக்குத்தான் தெரியும் காவல்துறை யூகத்தின் அடிப்படையில் நாம் கூறும் இடங்கள் பாதுகாப்பு காவல்துறை வழங்குவார்கள். நாம் நடத்தும் கூட்டத்தை நோக்கி எத்தனை லட்சம் பேர் வருவார்கள் ஒரே இடத்தில் அவ்வளவு பேரை தேக்க வைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு கட்சித் தலைவர் அதற்கான செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும் என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்.
இரவோடு இரவாக முதல்வர் களத்திற்கு சென்று உள்ளார் அமைச்சர்கள் அனைவரும் அங்கு சம்பவ இடத்தில் உள்ளார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள், துயரத்தில் நாம் உறைந்து கிடக்கின்ற போது இவர்தான் காரணம் அவர்தான் காரணம் என குற்றம் சுமத்துவது ஏற்புடையது இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை நடந்தது பாதிப்புக்கு காரணங்கள் என்ன என்பது குறித்து அந்த ஆணையம் விசாரணை நடத்தும், அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு பின்வரும் காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்படி எல்லாம் அசம்பாவிதங்கள் நடைபெற கூடாது என்பதற்காகத்தான் காவல்துறை நமக்கு பல்வேறு நிபந்தனைகளை வழங்குகின்றனர், அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் செயல்படும்போது ஓரளவுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும், தொடக்கத்தில் நாங்களும் காவல்துறைக்கு எதிராக பேசி இருக்கிறோம், ஆனால் இதுபோன்று பெரும் திரளை கூட்டம் பொழுது காவல்துறைக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்பதை நாம் உணர்ந்து இருக்கிறோம். எனவே இந்த விவகாரத்தில் காவல்துறை பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது என நாம் போகிற போக்கில் சொல்லி விட முடியாது. தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் மீண்டும் மக்களை சந்திக்க செல்வார் என நான் நம்புகிறேன்'' என்றார்.