நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கடந்த 2016 - 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அந்த ஆண்டிற்கான வருமானமாக சுமார் 36 கோடி ரூபாய் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இது தொடர்பாக 2016 - 2017ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதோடு வருமானவரித் துறையினர் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியிருந்தனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் அவர் நடித்த ‘புலி’ திரைப்படத்திற்குப் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து வருமானத்தை மறைத்ததற்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துக் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வருமான வரித்துறை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வருமானவரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (09.01.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் வாதிடுகையில், “நடிகர் விஜய் 2016- 17ஆம் நிதியாண்டுக்கான வருமானமாக ரூ. 35.42 கோடி தெரிவிக்கப்பட்டு இருந்தது. விஜய்க்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததில் தவறில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி இது தொடர்பாக விஜய் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை 23ஆம் தேதிக்கு (23.01.2026) ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/it-judgement-tvk-vijay-2026-01-09-23-21-11.jpg)