குஜராத், மகராஸ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்களும், ஆந்திராவில் இருந்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்குக் கடத்தி வரப்பட்டு இலங்கைக்குக் கடல் மார்க்கமாகக் கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தல்களில் வட மாநிலத்தவர்களே அதிகம் ஈடுபட்டுள்ளனர். இதே போலப் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் தங்கியுள்ள வடமாநில போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் குட்கா போன்ற போதைப் பொருட்களைச் சொகுசு கார்கள் மூலம் தென் மாநிலங்கள் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பெங்களூரில் இருந்து திருச்சி - விராலிமலை வழியாகத் தென் மாவட்டங்களுக்கு குட்கா பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதனால் விராலிமலையில் திடீர் வாகன சோதனைகள் செய்யப்பட்டு அடிக்கடி குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதே போல இன்று (10.09.2025) விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் வாகன சோதனை செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனே காரில் இருந்த ராஸ்தான் மாநிலம் நரதா கலுராம்ஜி மகன் லிலாராம் (வயது 24), கேவாராம் மகன் ரஞ்சோட் (வயது 20), மற்றும் மணப்பாறை நல்லம்பள்ளி சுப்பிரமணியன் மகன் கிருபாகரன் (வயது25) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், பெங்களூர் குடோனில் இருந்து ஏற்றப்பட்ட குட்கா பொருட்களை வரும் வழியில் பல இடங்களில் மொத்தமாகக் கொடுத்துவிட்டு தற்போது மதுரைக்குக் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர். மேலும் மதுரை செல்லும் வழியில் மேலும் சில இடங்களில் குட்கா மூட்டைகளை இறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது போலப் பல கார்களில் பல்வேறு பகுதிகளுக்கும் டன் கணக்கில் குட்கா பொருட்களை ராஜஸ்தான் இளைஞர்கள் கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து காரில் இருந்த 520 கிலோ குட்கா பொருட்களையும் கடத்திச் சென்ற காரையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். வடமாநிலத்தவர்கள் தங்கள் வருமானத்திற்காகத் தென் இந்தியாவைக் குறிவைத்து போதைப் பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.