கேரளம் மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வீணா ஜார்ஜ் மாநில சுகாதார துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று (25.02.2026) ரயிலில் பயணம் செய்ய வேண்டி கண்ணூர் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு, அமைச்சருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் நிர்வாகிகள் வீணா மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.  

Advertisment

இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த, கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஏ.என். ஷம்சீர் இது பற்றிக் கூறுகையில், "எதிர்க்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமைச்சர் வீணாவிற்கு கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காயம்பட்ட அமைச்சர் வீணா ஜார்ஜ் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.ஜெயராஜன் கூறியுள்ளார். 

Advertisment

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயன், "அமைச்சர் வீணா ஜார்ஜின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு பழம்பெரும் கட்சியின் (காங்கிரஸ்) வருந்தத்தக்க அரசியல். இது அக்கட்சியின் மாணவரணியின் போராட்டம் அல்ல, வன்முறையாளர்களின் வெறியாட்டம்" என கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதனிடையே, கடந்த சில நாட்களாக ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சில அசம்பாவிதங்களைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். 

அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் தவறுதலாகப் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட கருவியை (இடுக்கி) வைத்து அறுவை சிகிச்சையைச் செய்துள்ளது தற்போது கண்டறியப்பட்டது . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மருத்துவத்துறையில் நடந்த இந்த அசம்பாவித சம்பவங்களுக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment