இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. அதே போல், சமீபத்தில் ஈரானுக்கு எதிராக நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா களமிறங்கியது. ஈரானில் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகவும் குற்றம்சாட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. ஈரான் பதில் தாக்குதல் நடத்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு போர் நிறுத்தத்தை அறிவித்தார். அதன் பின்னர், இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி நிலவி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (07-07-25) இரவு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பெஞ்சமினுக்கு இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்தின்போது அமெரிக்க அரசின் உச்ச பொறுப்பில் இருப்பவர்கள் பங்கேற்றனர். காசாவில் 21 மாதங்களாக நடந்து வரும் போரை நிறுத்த 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமெரிக்க ஆதரவுடன் கத்தாரில் மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கான திட்டத்தை வகுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, டொனால்ட் டிரம்பை நோபல் பரிசுக்காக பரிந்துரைத்து தாம் அனுப்பிய கடிதத்தின் நகலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பிடம் வழங்கினார். இது குறித்து நெதன்யாகு அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளதாவது, “அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே சிறந்த வாய்ப்புகளை உணர்ந்துள்ளார். அவர் ஆபிரகாம் ஒப்பந்தங்களை உருவாக்கினார். நாம் பேசும்போது அவர் ஒரு நாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக பிராந்தியத்தில் அமைதியை உருவாக்குகிறார். எனவே அதிபரே, நான் நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். இது உங்களை அமைதிக்கான பரிசுக்கு பரிந்துரைக்கிறது. இது மிகவும் தகுதியானது, நீங்கள் அதைப் பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், “இது எனக்குத் தெரியாது. ஆனால், மிக்க நன்றி. குறிப்பாக உங்களிடமிருந்து வரும்போது, இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்றார். முன்னதாக கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிரம்ப், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் அந்த விளைவுகள் என்னவாக இருந்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. நான் நான்கு அல்லது ஐந்து முறை வரை அதை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க மாட்டார்கள்.ஏனெனில், தாராளமயவாதிகளுக்கு தான் அந்த விருது வழங்கப்படும். ஆனால், மக்களுக்குத் தெரியும் அதுதான் எனக்கு முக்கியம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.