பதற்றத்திற்கு பஞ்சமில்லாத மத்திய கிழக்கில் பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. இதில் தெஹ்ரானில் உள்ள உச்சபட்ச தலைவரின் அலுவலகம் மற்றும் வசிப்பிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 86 வயதான அலி கமேனி உயிரிழந்தார். இதே தாக்குதலில் அவரது மனைவி, மற்றொரு மகன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர். அலி கமேனி 1989 முதல் 37 ஆண்டுகளாக ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்து வந்தவர்.அவரது ஆட்சி கடுமையான ஷியா இஸ்லாமிய கொள்கைகள், அமெரிக்கா-இஸ்ரேல் எதிர்ப்பு, IRGC ( ஈரான் புரட்சிகர காவல்படை) ஆதரவு ஆகியவற்றால் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அலி கமேனி கொல்லப்பட்ட சில நாட்களிலேயே, ஈரானின் நிபுணர்கள் சபை அவசரமாகக் கூடியது. இந்த 88 உறுப்பினர்கள் கொண்ட குழு தான் உச்சபட்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றது. IRGC-யின் கடும் அழுத்தத்தின் கீழ், 56 வயதான மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மொஜ்தபா கமேனி அலி கமேனியின் இரண்டாவது மகன். அவர் இதுவரை ஈரான் அரசில் எந்த முக்கிய பதவியையும் வகித்ததில்லை. ஆனால், தந்தை கமேனியின் பதவிக் காலத்தில் உச்ச தலைவரின் அலுவலகமான பெயிட் ரபாரியை சுமார் 20 ஆண்டுகள் வழிநடத்தியவர். ஈராக்கிற்கு எதிரான போரிலும் மொஜ்தபா பங்கேற்றுள்ளார்.
இதனால் கமேனியால் உருவாக்கப்பட்ட துணை ராணுவமான ஈரான் புரட்சிகர காவல்படையிலும், மதகுருமார்களிடமும் மக்களிடமும் மொஜ்தபாவிற்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதனால் மொஜ்தபாவை உச்சதலைவராக நியமிக்க ஈரானின் புரட்சிகர காவல்படை நிபுணர்கள் சபைக்கு அழுத்தம் கொடுத்து இந்தத் தேர்வு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போதுவரை மொஜ்தபா வெளியே தோன்றவே இல்லை. அதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதேசமயம் மொஜ்தபா தாக்குதலின்போது தெஹ்ரானில் இல்லாததால் உயிர் தப்பியதாகவும், தற்போது அவர் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ஈரான் தீவிரவாத ஆட்சி தேர்ந்தெடுக்கும் எந்தத் தலைவரும், அவரது பெயர் என்னவாக இருந்தாலும், அவர் எங்கு மறைந்திருந்தாலும், இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தைத் தொடர்ந்தால், அமெரிக்கா, சுதந்திர உலகம் மற்றும் பிராந்திய நாடுகளை அச்சுறுத்தினால், ஈரான் மக்களை அடக்குமுறை செய்தால், அவர் அழிக்கப்படுவார்” என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஏற்கனவே அலி கமேனியின் கதையை முடித்தது போல் புதிய தலைவரையும் முடித்துவிடுவோம் என்று இஸ்ரேல் பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால், மொஜ்தபா கமேனியின் பதவியேற்பு அறிவிப்பு தாமதமாகலாம் என்றும், அவரது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன. இதனிடையே அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை சிதைத்து வருகின்றன. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ட்ரோன் தாக்குதல் ஈரான் நடத்தி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/benjamin-2026-03-05-18-52-18.jpg)