அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி (வயது 86) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் காரணமாக ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், 7 நாட்கள் பொது விடுமுறையும் விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
அதே போன்று ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி சையித் அப்தோல்ரஹீம் மௌசவி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஸீஸ் நாசிர்ஸதேஹ் ஆகியோரும் அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு உறுதி செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்திருந்தது. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை அந்நாட்டு அதிபராக இருந்த ஆவர். இவர் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ஆவார். அதோடு ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுப்பதற்கு வலுவான முன்னெடுப்புகளை செய்தவர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் லெபனான் நாட்டின் மீது இஸ்ரேலிய படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இடங்களைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக லெபனான் நாட்டு மக்கள் அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us