பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 250-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அன்று தொடங்கிய இந்த இரு நாடுகளுக்கு இடையேயான போர், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது. இதில், இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, காசா நகரமே உருக்குலைந்து போனது.
இந்தச் சூழலில், காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உலகம் முழுவதிலிருந்தும் குரல் எழுந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், காசா - இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்சத் திட்டங்களை அறிவித்தார். இதனை முன்வைத்து, இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புகளிடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இரு தரப்பும் உடன்பட்ட நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் பகுதியில், இஸ்ரேல் - ஹமாஸ் ஆகிய இரு தரப்பும் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், காசாவிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனைச் செயல்படுத்தும் விதத்தில், முதற்கட்டமாக காசாவிலிருந்து 20 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். இஸ்ரேலும் தங்கள் வசம் உள்ள 2,000 பாலஸ்தீனர்களை விடுவித்து, காசாவின் சில பகுதிகளில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், அங்கிருந்து வெளியேறி வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்த பாலஸ்தீனர்கள், மீண்டும் காசா பகுதிக்குள் திரும்பி வருகின்றனர். இதற்கிடையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக எகிப்து புறப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது, "இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்துவிட்டது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இது நான் நிறுத்தியுள்ள எட்டாவது போர். இப்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே போர் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் போர் குறித்து நான் திரும்பி வந்ததும் பார்க்க வேண்டும். நான் ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போரையும் நிறுத்தும் முயற்சியில் உள்ளேன். போர்களை நிறுத்துவதில் நான் வல்லவன்," எனப் பெருமையாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, பிணைக் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில், பிரபலமான மற்றும் முக்கிய பாலஸ்தீனத் தலைவரான மர்வான் பர்ஹௌதியை விடுதலை செய்ய இஸ்ரேல் மறுத்துள்ளது. தற்போது அவருக்கு 66 வயது ஆகிறது. பத்ஹா கட்சித் தலைவரான மர்வான் பர்ஹௌதி, 2002-ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய சிறையில் உள்ளார். இவருக்கு பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மர்வான் பர்ஹௌதியுடன் மேலும் பல முக்கிய தலைவர்களையும் விடுவிக்க இஸ்ரேல் மறுத்துள்ளது.அதேவேளையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் இந்த நடவடிக்கை முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, அக்டோபர் 13-ஆம் தேதிக்குள் 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.