கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 5-ம் தேதி லால்கான் தெருவில் உள்ள நவாப் பள்ளிவாசலில் சிதம்பரம் ஜவஹர் தெருவை சேர்ந்த ஹரிப் மகன் முகமது இஸ்மாயில் (45) என்பவர், அவரது ஆதரவாளர்களுடன் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும்  லால்கான் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் பள்ளிவாசலின் கணக்கு வழக்குகளை, சொத்து விவரங்களை கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களுக்கும் முகமது இஸ்மாயில் தரப்புக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

Advertisment

இதுகுறித்து முகமது இஸ்மாயில்(45) சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செல்லப்பா என்கிற ஜியாவுதீன் மற்றும் மஜீத், முகமது உசேன், ஈசாக், பக்ருதீன், பினாயில் ஆரிஃப், சையது, யூசுப் உள்ளிட்டோர் சேர்ந்து முகமது இஸ்மாயில் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்ந்த முகமது உசேன் (51), கொடுத்த புகாரின் பேரில் சாகுல் ஹமீது, நகிப், சபீர், ஜமால் உசேன், பைரோஸ், நாசர், ஹசன் ஹரிப், தசீர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிதம்பரத்தில் இஸ்லாமியர்கள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பினரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இரு தரப்பினரும் அரை மணி நேர இடைவெளியில் சிதம்பரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகமது இஸ்மாயில் தரப்புக்கு ஆதரவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் முகமது நுமான் தலைமையில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில்  லால்கான் பள்ளிவாசல்  நிர்வாகிகளை கண்டித்தும் கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதேபோல சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலை சேர்ந்த செல்லப்பா என்கிற ஜியாவுதீன் தலைமையில், நிர்வாகிகள் ஹலீம், முகமது அலி, மக்கின் உள்ளிட்டோர் சேர்ந்து நவாப் பள்ளிவாசல் நிர்வாகிகளை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.