'ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் 52 வேலைக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் பெண்கள் குவிந்துள்ளனர். இது தான் 34 லட்சம் வேலை வழங்கிய லட்சணமா?' என பகமவின் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் அமைந்திருக்கும் ஃபேர் வே என்ற காலணி தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள 52 பணியிடங்களுக்கு இன்று விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக நிறுவன வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் ஊதியம் ஒப்பீட்டளவில் குறைவு தான் என்றாலும் கூட, அந்த வேலையையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல்லாயிரம் பேர் திரண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்து விட்டன; அதனால் 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டது என்றும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகளின் படி, 2020-21ல் 54 லட்சமாக இருந்த பணியாட்களின் எண்ணிக்கை, 2025-26ல், கிட்டத்தட்ட 84 லட்சமாக உயர்ந்திருப்பதால், 30 இலட்சம் வேலைகள் கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு வந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு தொடர்பான எதார்த்தமான நிலை என்ன என்பதை போச்சம்பள்ளியில் வேலை கேட்டு திரண்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் காட்டியிருக்கிறது.
திமுக அரசின் முகமூடியும், மோசடி வலையும் கிழியத் தொடங்கி விட்டன. படித்த இளைஞர்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத அரசு தான் திமுக அரசு என்பது இப்போது அமபலமாகி விட்டது. வேலை கேட்டு போச்சம்பள்ளியில் இன்று திரண்ட இளைஞர் சக்தி, வெகு விரைவில் திமுக அரசை விரட்டியடிக்க பெருமளவில் திரளும். அப்போது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உண்மையாகவே புதியதோர் தமிழகம் அமையும். அதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/085-2025-11-21-19-23-55.jpg)