அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளை இன்று (17-01-26) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலித்திய பின்னர், முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். வாக்குறுதி 1, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும்.
வாக்குறுதி எண்.2, ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும். வாக்குறுதி எண்.3, அனைவருக்கும் வீடு, அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அது போல், நகரப் பகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் திட்டம் மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதை போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் அவருடைய மகன்கள் திருமணமாகி தனி குடித்தனம் செல்கின்ற போது அரசே இடம் வாங்கி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வாக்குறுதி எண்.4, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். வாக்குறுதி எண்.5, ரூ.25,000 மானியத்துடன் ரூ.5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மூலம் வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதிமுகவின் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குறுதி பேசுபொருளாகி இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான், 'அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் என்ன புதிதாக இருக்கிறது. ஏற்கனவே திமுக ஆட்சியில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இவர்கள் வந்தால் கூடுதலாக ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்கிறார்கள். இதனால் 10 லட்சம் கோடி கடன் 15 லட்சம் ஆகும். ஆண்களுக்கு இலவச பேருந்து நாங்கள் கேட்டோமா? சொல்லுங்க. ஏற்கனவே ஒரு லட்சம் கோடி இழப்பில் போக்குவரத்துதுறை போகிறது. இலவசமாக கொடுக்கிற காசை எங்க இருந்து எடுப்பீங்க? இது நல்ல திட்டமா நஷ்டமா?
ஒரு தரமான பேருந்து இருக்கிறதா? இப்போது இருப்பதெல்லாம் தரமான பேருந்தா? நீங்களும் உங்கள் குடும்பமும் அதில் போவீர்களா? கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பாதி பக்கம் பெயர்ந்து, முன்னாடி இல்லாமல், பின்னாடி இல்லாமல் போயிட்டு இருக்கும் போதே பேருந்து பெயர்ந்து ஓடுவதை பார்த்துக்கொண்டுதானே இருக்குறீர்கள். பேருந்தா காயலாங்கடையில் இருக்கும் பழைய இரும்பா அது. இலவச பேருந்து கொடுங்க என யார் கேட்டது.
இலவச பேருந்தில் போவோருக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள் என எல்லோரும் பார்த்தோமே. 'ஓசிலதான வர' என பெண்களை பேசியதெல்லாம் கேட்டதில்லையா? இதெல்லாம் ஒரு நலத்திட்டம் என்று சொல்ல வரீங்களா? ஏற்கனவே அம்மா வந்தா அம்மா வீடு, ஐயா வந்தா ஐயா வீடு என்று கட்டி கொடுத்துட்டுதான் இருந்தீங்க. அந்த வீட்ல நீங்க குடி இருப்பீங்களா? இல்ல உங்க பிள்ளைகள் யாராவது இருப்பாங்களா? அது வீடா கோழிக்கூடா? கொஞ்சம் பெரிய கோழிக்கூடு அவ்வளவுதானே. புதுசா ஏதாவது சொல்லச் சொல்லுங்க. ஆக்கப்பூர்வமாக ஏதாவது சொல்லச் சொல்லுங்க. தரமான பேருந்தை கொடுத்து கட்டணம் கொடுத்து பயணிக்கும் வசதியை தரச் சொல்லுங்க. 1000 ரூபாய், 2000 ரூபாய் கொடுக்காமல் மாதம் 20,000 ரூபாய் ஈட்டி கொள்ளக்கூடிய வேலைவாய்ப்பை என் தாய்மார்களுக்கு கொடுக்கச் சொல்லுங்க'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/17/684-2026-01-17-20-20-44.jpg)