கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா, 'கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்' என்ற சந்தேகத்தை எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சந்தேகத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே இருக்கும். திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உறுதி செய்துள்ளது.
19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 47 மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் இந்த தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடகாவில் ஏற்பட்ட திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல' என தெரிவிக்கப்பட்டுள்ளது.