பாஜகவில் முக்கிய பிரமுகர் ஒருவர் இணையப்போவதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தனக்கு தெரியாது என்று பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். வரும் அக்டோபர் 12 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அதற்குள் பாஜகவில் முக்கிய நபர்களை இணைக்கும் செயலில் பாஜக தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த நயினார் நாகேந்திரன் காரில் கிளம்பியபோது செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பினர். அப்போது நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான காளியம்மாள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,''இல்லை இல்லை... எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அதுபோன்ற இந்த தகவலும் இல்லை'' என்றார்.