பாமகவில் அப்பா மகனுக்குமிடையே ஏற்பட்ட மோதலால் கட்சி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இதில், அன்புமணி ஒரு பக்கம், ராமதாஸ் ஒரு பக்கம் எனத் தனது கட்சி தொண்டர்களை இரு கூறுகளாகப் பிரித்து வைத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், அன்புமணி தங்கள் அணி தான் உண்மையான பாமக எனவும், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் கூறி வந்தார். அதே வேளையில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதையும் உறுதி செய்துள்ளார்.
மேலும், அவர் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. மறுபுறம், பாமக (ராமதாஸ்) எந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது ரகசியமாக இருந்து வந்தது. இந்த நிலையில், சமீப காலமாக பாமக (ராமதாஸ்) திமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. நீண்ட காலமாக இந்த கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த பேச்சுவார்த்தையில், திமுக அமைச்சர் ஏ.வ. வேலு தலையிட்டு கூட்டணி குறித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சமயத்தில், திமுகவுடன் பாமக (ராமதாஸ்) கூட்டணி அமைத்தால் விசிக, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் என அக்கட்சியின் நிர்வாகிகள் கூறிவந்தனர்.
இதையடுத்து, திமுகவுடன் மிக நீண்டகாலமாக விசிக இணக்கமாக இருந்து வருகிறது. மேலும் கொள்கை ரீதியாகவும் விசிக, திமுகவுடன் ஒத்துப்போவதால், திமுக கூட்டணிக்கு விசிக அவசியம் தேவை என்பதை உணர்ந்த திமுக, விசிக கூட்டணியை உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் பாமகவிற்கு (ராமதாஸ் தரப்பு) இடமில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் ஆளும் திமுகவை எதிர்த்துக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ராமதாஸ் (பாமக) தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த ஜான் ஆரோக்கியசாமி மூலமாக இந்த தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருப்பினும், விரைவில் தவெக தலைவர் விஜய் தைலாபுரம் சென்று ராமதாஸைச் சந்திப்பார் என்ற தகவல்கள் வெளியாகின்றன.
Follow Us