அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதாவின் 78வது பிறந்த தினம் இன்று (24.022026) தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, தேனியில் அவரது புகைப்படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த 2001ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்குச் சோதனை வந்தபோது, என்னை முதலமைச்சராகப் பொறுப்பேற்கப் பணித்தார். அதன்படி ஆறு மாத காலம், அவர் இட்ட கட்டளையை மேற்கொண்டு, ஒரு தொண்டனாக அவர் வழிநடந்த பாதையிலிருந்து சற்றும் பிசகாமல் பணியாற்றியது நாட்டு மக்கள் அறிந்ததே. அதன்பின்னர், ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வந்தார்.
அப்போது, எந்தவித நிபந்தனையும் இன்றி மகிழ்ச்சியோடு என் பதவியை அவர் கரங்களில் ஒப்படைத்தேன்.அதேபோல், 2014இல் பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதா பதவியை விட்டு விலக நேரிட்டது. அந்த இக்கட்டான சூழலிலும், அடுத்த வினாடியே என்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்குமாறு உத்தரவிட்டார். அப்போதைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, 'ஓ. பன்னீர்செல்வமே மீண்டும் முதலமைச்சர்' என அறிவிக்குமாறு ஜெயலலிதா அறிவுறுத்தினார்.
ஜெயலலிதா நம்பிக்கைக்குரிய ஒரு சாதாரணத் தொண்டனாக, அவர் இட்ட கட்டளையை ஏற்றுத் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று என் கடமையை ஆற்றினேன். நான் ஏற்கனவே நான் நடத்தி கொண்டிருக்கின்ற அதிமுக அடிப்படை தொண்டர்கள் உரிமையை மீட்பு கழகத்தில் ஒவ்வொரு மாதமும் தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் கொடுத்த அறிவிப்பு படி எந்த நிலையிலும் நான் தனிக்கட்சி துவங்க மாட்டேன் என நான் அறிவித்திருக்கிறேன். அதிமுகவை மீட்டெடுக்கவும், கட்சியின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக தான் இந்த கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு நான் உறுப்பினர்களை கூட சேர்க்கவில்லை. இருக்கிறவர்கள வைத்துக் கொண்டு தான் நீதிமன்றத்தில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/24/ops-theni-pm-1-2026-02-24-14-58-33.jpg)