சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மிக மோசமான நிலையில் இருக்கிறது. பாமகவை சேர்ந்த ம.க.ஸ்டாலின் என்பவர் தன்னுடைய ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு உள்ளேயே தாக்கப்பட்டிருக்கிறார். குண்டு வீசப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு கழிவறை சென்று காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அதேபோல் இன்று ஏர்போர்ட் மூர்த்தியை காவல்துறை அலுவலகத்திற்கு வெளியே வைத்து சிலர் தாக்கி இருக்கிறார்கள். காலனியால் அடிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் மு.க.ஸ்டாலின் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஜிஎஸ்டி என்னும் மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொழுது அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நன்றி சொல்லாமல் பாராட்டாமல் இவர்கள் இருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சட்ட ஒழுங்கை உடனே சரி செய்யுங்கள். சாமானிய மக்கள் தாக்கப்பட்டதை கடந்து, பொதுமக்கள் தாக்கப்பட்டதை கடந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதை கடந்து, காவல்துறையினர் அலுவலகத்திற்கு உள்ளேயே தாக்கப்பட்டதை கடந்து, விசாரணை கைதிகள் தாக்கப்பட்டதை கடந்து தற்போது அரசியல் கட்சித் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை வந்திருக்கிறது. இது மிக மிக வேதனை. உடனடியாக தமிழகம் முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டிற்கு சென்று பெரியாரின் படத்தை திறந்து வைத்துவிட்டு சமூக நீதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கு சமூக நீதி புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடக்கிறது. பட்டியல் இன சகோதரர் காலில் விழ வைக்கிறார்கள். பெரியார் பாதையில் நடைபோடுகின்றோம் என்று சொன்னால் காலில் விழ வைப்பதும், மலம் கலந்த நீரை குடிக்க வைப்பதும் தான் பெரியாரின் பாதையில் நடப்பதா?'' என்றார்.