'Is it funny to watch the obscene attack on Sangeeta?' - Matar Sangam condemns Vijay Photograph: (vijay)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்தது முதலே, சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிரமாக இயங்கி வருகிறது. விஜய்யின் வருகையும் அவரது பேச்சுகளும், அரசியலில் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி வருகிறது.
நடிகர் விஜய் கடந்த 1998 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். விஜய் - சங்கீதா ஜோடிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தொடக்கத்தில் இசை வெளியீட்டு விழா, விருது நிகழ்வுகளில் கலந்து கொண்ட சங்கீதா, சமீப காலங்களாக பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். திருமணமாகி இருபத்து ஐந்து ஆண்டுகளை தாண்டிய நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா, புது கட்சி அறிவிப்பு உள்ளிட்ட எந்த விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் உலா வந்து கொண்டிருந்தது.
இந்தநிலையில், சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. சங்கீதாவுக்காக மும்பையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் சென்னையைச் சேர்ந்த இரண்டு பிரபல வழக்கறிஞர்களும் ஆஜராகினர். ஏப்ரல் 20 ஆம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதில் விஜய் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. உச்ச நடிகராக இருந்து, முதலமைச்சர் கனவோடு அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் தனிமனித வாழ்வில் தனது மனைவி மீது குடும்ப வன்முறையை நிகழ்த்தியும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் தவறான செய்திகளும், கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் கட்சிக்காரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சங்கீதா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர் மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். இந்த ஆபாச தாக்குதலுக்கு விஜய் தரப்பில் இருந்து எந்தவித கண்டமும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்கீதாவை விமர்சிப்பவர்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள மாதர் சங்கம், 'சங்கீதா விவாகரத்துக்கு மனுதாக்கல் செய்திருப்பது தனிப்பட்ட சட்ட நடைமுறை. தனிப்பட்ட விவகாரத்தை சமூக வலைத்தளம் மற்றும் பொதுவெளியில் ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. விஜய்யின் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் சில தொண்டர்கள் சங்கீதாவை இழிவுபடுத்தி வருகின்றனர். சங்கீதா மீது ஆபாச தாக்குதல் நடத்துபவர்கள் மீது விஜய் எதிர்வினையாற்றி ஆபாச அர்ச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது.
Advertisment
Follow Us