'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. அதேநேரம் டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அதிமுகவில் பேசு பொருளாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் சேலத்தில் இருந்து நீலகிரிக்கு சுற்றுப்பயணத்திற்காக சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உற்சாகமாகத் திரண்டு, காரில் வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
தொடர்ந்து நீலகிரிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி குன்னூரில் பேசுகையில்,''இன்றைக்கு குன்னூர் வருவதற்கு முன்பாகவே சகோதரரிடம் கேட்டேன் மழை வருமா வராதா எனக் கேட்டேன். அவர் சொன்னார் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர்வதற்கு நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வருண பகவான் நமக்கு அருள் புரிவார். அதனால் வானம் மந்தமாக மேகமூட்டத்துடன் இருந்தாலும் உங்களை எல்லாம் சந்தித்து எழுச்சி உரையாற்றுகின்ற பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இன்றைக்கு வருண பகவான் நமக்கு ஒத்துழைப்பை கொடுத்து இருக்கிறார். திமுக ஆட்சியில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா?
இதே அதிமுக வந்த பொழுது நீலகிரி மாவட்ட மக்களை நேசித்தவர் ஜெயலலிதா. எப்போது பார்த்தாலும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டம் மக்களை அவ்வப்போது சந்தித்துக் கொண்டு இருந்தார். மலைக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என அதிமுக அரசில் முதலமைச்சராக இருந்தபோது 400 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தேன். அந்த திட்டத்தின் மூலமாக இன்றைக்கும் இந்த பகுதி மக்களுக்கு ஏதாவது நோய்வாய் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னால் சிறப்பாக அறுவைச் சிகிச்சை செய்யக்கூடிய அளவுக்கு தரமான மருத்துவமனையை கொடுத்த அரசு அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாம் பெற்ற பிள்ளைகளுக்கு அவர் பெயர் வைத்து விட்டு போய்விட்டார். இது நியாயமா? திமுக நீலகிரி மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்கள் ஏதாவது ஒன்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்களா? ''எனக் கேள்வி எழுப்பினார்.