நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (01.07.2025) நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில், 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.
காலம் செல்லச் சொல்ல, நாட்கள் ஆக ஆக சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த இடங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே இது போன்ற செயல்கள் மேற்கொண்டு இந்த வழக்கைப் பலமிழக்க, வலுவிழக்கச் செய்யும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/02/a4275-2025-07-02-12-58-56.jpg)
இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசு சார்பில் வேலை வழங்குவதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் பணிநியமன ஆணையை அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் கொடுத்துள்ளார். பணி ஆணை மட்டுமல்லாது அஜித்குமாரின் வீட்டுக்கு இலவச மனை பட்டாவும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் மூலம் அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் செல்போனில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''சாரி.. கண்டிப்பாக குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்று தரப்படும்'' என உறுதி அளித்ததோடு, ஆறுதலும் சொல்லி இருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?
சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ முதல்வர் அவர்களே உங்கள் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குரிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:
1. பிரபாகரன் (வயது 45) - நாமக்கல் மாவட்டம்
2. சுலைமான் (வயது 44) - திருநெல்வேலி மாவட்டம்
3. தாடிவீரன் (வயது 38) - திருநெல்வேலி மாவட்டம்
4. விக்னேஷ் (வயது 25) - சென்னை மாவட்டம்
5. தங்கமணி (வயது 48) - திருவண்ணாமலை மாவட்டம்
6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) - சென்னை மாவட்டம்
7. சின்னதுரை (வயது 53) - புதுக்கோட்டை மாவட்டம்
8. தங்கபாண்டி (வயது 33) - விருதுநகர் மாவட்டம்
9. முருகாநந்தம் (வயது 38) - அரியலூர் மாவட்டம்
10. ஆகாஷ் (வயது 21) - சென்னை மாவட்டம்
11. கோகுல்ஸ்ரீ (வயது 17) - செங்கல்பட்டு மாவட்டம்
12. தங்கசாமி (வயது 26) - தென்காசி மாவட்டம்
13. கார்த்தி (வயது 30) - மதுரை மாவட்டம்
14. ராஜா (வயது 42) - விழுப்புரம் மாவட்டம்
15. சாந்தகுமார் (வயது 35) - திருவள்ளூர் மாவட்டம்
16. ஜெயகுமார் (வயது 60) - விருதுநகர் மாவட்டம்
17. அர்புதராஜ் (வயது 31) - விழுப்புரம் மாவட்டம்
18. பாஸ்கர் (வயது 39) - கடலூர் மாவட்டம்
19. பாலகுமார் (வயது 26) - இராமநாதபுரம் மாவட்டம்
20. திராவிடமணி (வயது 40) - திருச்சி மாவட்டம்
21. விக்னேஷ்வரன் (வயது 36) - புதுக்கோட்டை மாவட்டம்
22. சங்கர் (வயது 36) - கரூர் மாவட்டம்
23. செந்தில் (வயது 28) - தர்மபுரி மாவட்டம்
இவர்களது பெற்றோரிடமும், மனைவி-மக்களிடமும் முதல்வர் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.