'Is it fair to build a college using temple money?' - Edappadi Palaniswami's speech Photograph: (admk)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டம் வடவெள்ளியில் 2வது நாளாக நேற்று (08.07.2025) உரையாற்றினார். திறந்தவெளி வேனில் நின்றபடி அவர் பேசுகையில், ''அறநிலைத்துறையில் கோவில் பணம் இருந்தது. பொறுக்க முடியவில்லை. நான் சொல்லக்கூடாது. என்னவென்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னால் வேறுவிதமாகிவிடும். கண்ணை உறுத்துகிறது. கோவிலைக் கண்டாலே கண்ணை உறுத்துகிறது. அதில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். கோவில் கட்டுவதற்காக உங்களைப் போல் இருக்கின்ற நல்ல உள்ளங்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள் உண்டியலில் பணம் போடுகிறீர்கள்.
அது அறநிலையதுறைக்கு சேர்கிறது. எதற்காக சேர்கிறது கோவிலை அபிவிருத்தி பண்ணுவதற்காக விரிவுபடுத்துவதற்கு உள்ள அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன் அரசாங்கத்தில் இருந்து கல்லூரி கட்டினால் வேண்டாமா? நாங்கள் கொடுத்தோம் அல்லவா? அதிமுக ஆட்சியில் இத்தனை கல்லூரிகளை நாங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கட்டிய அனைத்து கல்லூரியும் அரசாங்கப் பணத்தில் கட்டி இருக்கிறோம். அறநிலையத்துறையில் இருக்கும் நிதியை எடுத்து இதற்கு செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம். சிந்தித்துப் பாருங்கள். இதையெல்லாம் சதிச்செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.
பல மக்கள் என்னிடத்தில் இதுகுறித்து கோரிக்கை வைத்தார்கள். கல்விக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். ஒரு மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ அதுபோல ஒரு நாட்டிற்குக் கல்வி முக்கியம். ஆனால் அந்த கல்வி அரசாங்கத்தில் இருந்து கொடுக்கலாம். ஏன் அரசாங்கத்தில் பணம் இல்லையா? பத்து கல்லூரிக்கு தேவையான பணம் இல்லையா?'' என்றார்.