21 வயது முஸ்லிம் ஆணுக்கும் 16 வயது முஸ்லிம் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்ட விதிகளின் கீழ் செல்லுபடியாகும் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. மேலும், முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் ஒரு பெண் பருவமடைந்தவுடன் அல்லது குறைந்தபட்சம் 15 வயது நிரம்பியவுடன் செல்லுபடியாகும் திருமணத்தில் நுழையலாம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ‘பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் விதித்த இத்தகைய தீர்ப்பு குழந்தை திருமண தடைச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்திற்கு முரணானது. எனவே அத்தகைய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகர்தனா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஆண் மற்றும் சிறுமி இருவரின் ஒப்புதலுடன் திருமணம் நடந்துள்ளது. சமூகத்தின் யதார்த்தத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் மக்கள் பெண்கள் பள்ளியிலோ அல்லது ஆண்கள் பள்ளியிலோ மட்டும் இல்லை. இப்போது பெண்களும் ஆண்களும் ஒன்றாக இருக்கிறார்கள். அதனை நாம் கூட்டுக் கல்வி என்று அழைக்கிறோம். அனைவருக்கும் கல்வி சுதந்திரம் உள்ளது. இப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். காதலிப்பது குற்றமாகச் சொல்ல முடியுமா?
உயர் நீதிமன்றம் இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளித்தால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அத்தகைய உத்தரவை எப்படி எதிர்க்க முடியும்? இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று பாதுகாப்பு ஆணையம் கூற முடியாது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை சவால் செய்ய ஆணையத்திற்கு உரிமை இல்லை” என்று கூறி ஆணையம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் மனுவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.